திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில், காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ர சமர்ப்பணம்

சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பவித்ர மாலைகளை கோவில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று தெய்வ விக்ரகங்களுக்கு அணிவிக்கப்பட்டன.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின்னர் பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இரண்டாம் நாளான நேற்று உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனத்தைத் தொடர்ந்து பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பவித்ர மாலைகளை கோவில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று, சுவாமி மற்றும் தாயாருக்கு அணிவிக்கப்பட்டன. மாலையில் உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சாந்தி மற்றும் கோவில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்றுடன் மகா பூர்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவுபெறுகிறது.
இதேபோல் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. உற்சவத்தின் 2-வது நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலை அருகில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலின் பிரதான அர்ச்சகர்களான சுவாமிநாத குருக்கள், கருணா குருக்கள் ஆகியோர் தலைமையில் யாகபூஜை நடந்தது.
யாகசாலையில் வைக்கப்பட்ட பவித்ர மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, அவற்றை கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று விநாயகர், செங்கல்வராயசாமி, சூரிய பகவான், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு அணிவிக்கப்பட்டன. அதன்பிறகு நைவேத்தியம் சமர்ப்பித்து மகா தீபாராதனை காண்பித்து, மந்த்ர புஷ்பம் நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் துணைச் செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி, காப்பாளர் நாகபூஷ்ணம், ஆய்வாளர் வெங்கடசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.