பல்லடம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து மாகாளி அம்மனை வழிபட்டனர்.
பல்லடம் பச்சாபாளையத்தில் அருள்மிகு மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 300 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த கோவிலின் 125 -வது பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 11ம் தேதி முதல் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் மற்றும் சிறுமிகள் என நூற்றுக்கணக்கானோர் மாவிளக்கு ஏந்தி மாகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பல்லடத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் மாகாளி அம்மன் கோவிலை வந்தடைந்து மாகாளியம்மனை வழிபட்டனர்.
நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து மாகாளி அம்மனை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலத்துடன் மாகாளியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பல்லடத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்த மாகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.