பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்

திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அதேபோல் பண்டிகை காலங்களிலும் பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சில பக்தர்கள் அங்கபிரட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
பக்தர்கள் கடலில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் போடப்பட்டிருந்தது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு பக்தர்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சிலர் கடற்கரையில் மணலால் சுவாமி பூடம் செய்து அதன் அருகே வேல் மற்றும் காவடி வைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பாதயாத்திரை பக்தர்கள், வாகனங்களில் வந்த பக்தர்களின் கூட்டத்தினால் திருச்செந்தூர் நகர பகுதி நிரம்பியது. இதனால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. மேலும் வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் பஸ்நிலையம் அருகே, கீழரத வீதி, தெப்பகுளம் பகுதி உள்ளிட்ட இடங்களில் சாலை ஓரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கோவில் வளாகங்களில் சாதி மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட ஆடைகள், கொடிகளை பக்தர்கள் பயன்படுத்தக்கூடாது என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர்.






