நாமக்கல்: பொத்தனூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

108 வலம்புரி சங்குகளில் நிரப்பி பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பகுளாமுகி அம்மன் சமேத பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம், கலச அபிஷேகம் மற்றும் யாக பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட திரவியங்களால் மூலவர் பசுபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றி புஷ்பங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த சங்குகளில் இருந்த புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் பசுபதீஸ்வரர் சுவாமிக்கு நாமா வழிகள் கூறி உதிரிப்பூக்களினால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை, பஞ்சாரத்தி, ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.






