நாமக்கல்: பச்சைமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்-கலசாபிஷேகம்

சிறப்பு வழிபாட்டில் நாமக்கல் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கலந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பொத்தனூர் மேற்கு வண்ணாந்துறை பகுதியில் உள்ள பச்சை மலையில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, கார்த்திகை மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும் அதனை தொடர்ந்து யாக வேள்வியும் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகமும், 108 வலம்புரி சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. யாக வேள்வியை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பால தண்டாயுதபாணி சுவாமிக்கு நாமா வழிகள் கூறி உதிரிப்பூக்களினால் அர்ச்சனை செய்து அடுக்காரத்தி, பஞ்சாரத்தி, ஏகாரத்தியுடன் கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டது . விழாவில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கலந்து பொதுமக்கள் கலந்து கொண்டு பாலதண்டாயுதபாணி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சைமலை முருகன் கோவில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






