நாகூர் சந்தனக்கூடு ஊர்வலம்.. தர்காவில் சந்தனம் பூசும் வைபவம்

சந்தனக்கூடு ஊர்வலம் இன்று காலையில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் வந்தடைந்த பின் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், 469ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.
நாகையில் தொடர் கனமழை பெய்து வந்த நிலையிலும் சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் 10க்கும் மேற்பட்ட மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னுமாக அணிவகுத்து நாகை மற்றும் நாகூர் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்தது. இன்று காலை 6 மணி அளவில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் ஊர்வலம் வந்தடைந்து.
இதைத்தொடர்ந்து சந்தனக்கூட்டில் இருந்து தர்கா பரம்பரை ஆதினங்கள் மூலம் சந்தனக்குடம் ஆண்டவர் சமாதிக்கு.கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு பாரம்பரிய முறைப்படி சடங்குகளுடன் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்வினை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நாகூரில் குவிந்துள்ளனர்.






