நாகை: கணபதிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம்


தினத்தந்தி 16 Nov 2025 4:19 PM IST (Updated: 16 Nov 2025 4:21 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டம் கணபதிபுரம் திரௌபதியம்மன் கோயில் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், இடையாத்தங்குடி ஊராட்சி, கணபதிபுரம் கிராமத்தில் செல்வ விநாயகர், அபயாம்பிகை சமேத மயூரநாதர், வரசித்தி விநாயகர், சேப்பெருமாள் அய்யனார், திரௌபதி அம்மன், தயாள பரமேஸ்வரி, காளியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அக்கிராமத்தினர், மருளாளிகள் உள்ளிட்டோர் முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் முடிந்து கடந்த 14-ம் தேதி தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் வாஸ்து சாந்தி யாகசாலை பூஜைகள் நடந்தன. 15-ந் தேதி விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தீபாராதனை நடந்தது.

யாக சாலை பூஜை இன்று காலையில் நிறைவு பெற்றதையடுத்து காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 11.15 மணி வரை விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் வேளாக்குறிச்சி 18-வது குரு மகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story