மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ந்தேதி நடைபெற உள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு பங்குனி திருவிழா கொடியேற்றம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கபாலி.... கபாலி என்று பக்தி முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.
முன்னதாக, மயிலாப்பூரின் காவல் தெய்வமான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, விநாயகர் உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, புன்னைமர வாகனத்தில் சாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.
கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நாட்களில் வெள்ளி சூரிய பிரபை, வெள்ளி சந்திர பிரபை, வெள்ளி பூத வாகனம், வெள்ளி புருஷர் மிருகம், நாக வாகனம், சவுடல் விமானம் போன்ற வாகனத்தில் சாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.
தேரோட்டம்
விழாவையொட்டி, நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அதிகார நந்தி காட்சி, திருஞானசம்பந்த சுவாமிகள் திருமுலைப்பால் விழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு இறைவன் தேருக்கு எழுந்தருளல், காலை 7.45 மணிக்கு தேரோட்டத்திற்கான தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
அறுபத்து மூவர் திருவீதி உலா
10-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல், தொடர்ந்து அன்று மாலை 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது. வருகிற 11-ந்தேதி ஐந்திருமேனிகள் விழா, 12-ந்தேதி தீர்த்தவாரி, 13-ந்தேதி உமாமகேசுவர் தரிசனம், 14-ந்தேதி விழா நிறைவுத் திருமுழுக்கு நடக்கிறது. விழா நாட்களில் பகல், இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் திருவீதி உலா, மாலை 5 மணி முதல் விடையாற்றி கலை விழா, பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.