திருப்பதி ரத சப்தமி விழாவில் எந்த குறையும் இருக்கக்கூடாது.. தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவு


திருப்பதி ரத சப்தமி விழாவில் எந்த குறையும் இருக்கக்கூடாது..  தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவு
x
ரத சப்தமி விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
தினத்தந்தி 22 Jan 2026 11:31 AM IST (Updated: 22 Jan 2026 11:33 AM IST)
t-max-icont-min-icon

கோவில் மாட வீதிகள், தரிசன வரிசைகள் மற்றும் வெளிப் பகுதிகளில் அன்னப்பிரசாதம் தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்றைய தினம் காலை, இரவு பல்வேறு வாகன சேவைகள் நடக்கின்றன. மொத்தம் 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசுவாமி தனித்தும், உபய நாச்சியார்களுடனும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மலையப்பசுவாமியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ரத சப்தமி விழா ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.கே.சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோர் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் செயல் அதிகாரி ஏ.கே.சிங்கால் பேசுகையில், ஜனவரி 25-ம் தேதி ரத சப்தமி விழாவை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வாகன சேவைகளை பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பிற வசதிகள் எந்த குறையும் இல்லாமல் பக்தர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தேவஸ்தான ஊழியர்களிடையே ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசியதாவது:

* கோவில் மாட வீதிகள், தரிசன வரிசைகள் மற்றும் வெளிப் பகுதிகளில் அன்னப்பிரசாதம் தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும்.

* தேவஸ்தான கண்காணிப்புத் துறை மற்றும் மாவட்ட காவல்துறை ஒருங்கிணைந்து, ஒத்திகைப் பயிற்சிகளை நடத்துவதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

* பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக 5 லட்சம் லட்டுகள் கையிருப்பில் வைக்க வேண்டும்.

* போதுமான வாகன நிறுத்துமிட ஏற்பாடு செய்ய வேணடும்.

* வாகன சேவைக்கான வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படவேண்டும்.

* கேலரிகள், கழிப்பறைகள், தடுப்புகள், விளக்குகள், எல்இடி திரைகள், தூய்மைப் பணிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கவேண்டும்.

* வாகன சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.

* சூரியபிரபை வாகன சேவையின்போது, ​தேவஸ்தானத்தின் எஸ்.வி. பால மந்திர் மாணவர்கள் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரதசப்தமி நாளில் நடைபெறும் வாகன சேவைகள்

25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது. மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

ஆர்ஜித சேவைகள் ரத்து

ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story