மதுரை: திருவாதவூர் வரதப்பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் மேலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வரதப்பிடாரி அம்மனை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலம் ஆகும். இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரதப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. காவல் தெய்வமான வரதப்பிடாரி அம்மன் எழுந்தருளியிருக்கும் இக்கோவிலானது 100 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் ஆகாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் மதுரை, திருவாதவூர், மேலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வரதப்பிடாரி அம்மனை தரிசனம் செய்தனர்.
மன்னர்கள் காலத்தில் மன்னர்கள் மற்றும் படைத்தளபதிகள், போர் வீரர்கள் இக்கோவிலில் வழிபட்ட பிறகு போருக்கு சென்று வந்ததாகவும், அம்மனின் அருளால் போரில் வென்றதாகவும் கூறப்படுகிறது. தனிச்சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.






