மதுரை ஆவணி மூலத்திருவிழா: விறகு விற்ற திருக்கோலத்தில் எழுந்தருளிய சிவபெருமான்

விறகு விற்ற திருக்கோல காட்சியைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் தங்க சப்பரங்களில் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 10-ம் நாள் அலங்காரமாக விறகு விற்ற திருவிளையாடலை பக்தர்களுக்கு உணர்த்தும் கோலத்தில் சுந்தரேஸ்வரர், தங்க விறகை தலையில் சுமந்து நேற்று அருள்பாலித்தார். இந்த திருவிளையாடலை சிவாச்சாரியார்கள் நடித்து காண்பித்தனர். அதை தொடர்ந்து சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் தங்க சப்பரங்களில் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.
இந்த திருவிளையாடல் பற்றிய புராண வரலாறு வருமாறு:-
வரகுண பாண்டியன் ஆட்சி காலத்தில் ஏமநாதன் என்னும் புலவன் பாண்டிய நாட்டிற்கு வந்தான். யாழ் வாசிப்பதில் வல்லவனான அவன், மன்னன் முன் யாழ் மீட்டினான். யாழிசையில் மயங்கிய அரசன் ஏமநாதனை பாராட்டினார். ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கு அடைந்தார்கள். பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா? என ஆணவத்துடன் சவால் விட்டான். அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால், பாண்டிய மன்னன், கோவிலில் பக்தி பாடல்களை பாடும் பாணபத்திரரை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிட பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர்களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன், ஏமநாதனை வெல்லும் வழியறியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார்.
இறைவனும், விறகு விற்பவர் வேடத்தில் ஒரு யாழை எடுத்துக்கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத்திண்ணையில் அமர்ந்து யாழினை வாசித்துக் கொண்டே பாடினார். அந்த தெய்வ கானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து, நீ யார் என்று வினவ, அவரும் பாணபத்திரரிடம் சீடராக இருந்தவர் என்று கூறினார். சீடருக்கே இவ்வளவு திறமை என்றால் தன்னால் பாணபத்திரரை வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றான் என்று புராண வரலாறு கூறுகிறது.