சந்திர கிரகணம்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் கோவில்கள் மூடல்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்து உள்ளூர் கோவில்களும் நாளை மூடப்படுகின்றன.
திருமலை,
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு சந்திர கிரகணம் தொடங்குவதால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்து உள்ளூர் கோவில்களும் மூடப்படுகின்றன. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணியில் இருந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரம் முன்பே திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களும் மூடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.15 மணியளவில் மூடப்படும். நாளைமறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோவிலின் நடை திறந்து தூய்மைப்பணி, புண்யவசனம் நடத்தப்படுகிறது. காலை 8 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவிந்தராஜர்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் நாளை மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கோவில் சுத்தம் செய்யப்பட்டு பூலங்கி சேவை, சாத்துமுறை போன்றவை ஏகாந்தமாக நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு கோவில் மூடப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு சேவைகள் தொடங்குகின்றன. காலை 9.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
சீனிவாசமங்காபுரம்
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சேவைகள் ஏகாந்தமாக நடக்கிறது. மதியம் 3.30 மணிக்கு கோவில் மூடப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு கோவில் நடை திறந்து, சேவைகள் நடக்கின்றன. தொடர்ந்து காலை 8.30 மணியளவில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கபிலத்தீர்த்தம்
திருப்பதி கபிலத்தீர்த்தம் கபிலேஸ்வரர் கோவில் நாளை மதியம் 1.30 மணியில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை 3 மணி வரை மூடப்படும். அதிகாலை கோவிலின் நடை திறந்து சுத்தம் செய்யப்படுகிறது. தூய்மைப்பணி முடிந்ததும் சுப்ரபாதம், அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை முடிந்ததும் காலை 7 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பிற கோவில்கள்
அதேபோல் ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான அமராவதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரர் கோவில், அப்பலாயகுண்டா, நாராயணவனம், திருப்பதி கோதண்டராமர், கார்வேட்டிநகரம், கடப்பா, ஒண்டிமிட்டா ஆகிய கோவில்கள் நாளை மதியம் 1.50 மணிக்கு மூடப்பட்டு நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.