செல்வ வளம் தரும் நற்றுணையப்பர்

திருமணத் தடை உள்ளவர்கள் நற்றுணையப்பர் கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் பொன்செய் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, நற்றுணையப்பர் திருக்கோவில். இது தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு காவிரி நதி கிழக்கு முகமாக வந்து, மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.
கோவில் கருவறையில் சிவபெருமான், நற்றுணையப்பர் என்ற திருநாமத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 7 நாட்கள் சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் விழுவது சிறப்பாகும்.
விநாயகர், அகத்தியர் இருவருக்கும் சிவபெருமான், தன்னுடைய திருமணக் கோலத்தை காட்டி அருளிய தலம் இதுவாகும். எனவே சுவாமியின் வலது பக்கத்தில் அம்மன் வீற்றிருக்கிறார். மேலும் தனிச் சன்னிதியில் அம்மனுடன் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. நற்றுணையப்பரை வழிபட்டால் வாழ்வில் செல்வ வளம் பெருகும், குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.






