பாபநாசத்தில் 12 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

பாபநாசத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் படுகை புதுத்தெரு அரசலாற்றங்கரை அரச மரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி முருகன் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்தபின், யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலையில் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் திருக்கயிலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதனை தொடர்ந்து பாபநாசம் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், முருகன், வள்ளி, தெய்வானை, நரசிம்ம மூர்த்தி, மாரியம்மன் மற்றும் நவகிரகங்கள், 12 அடி உயர் அரசவேலன் முருகன் ஆகிய சுவாமிகளுக்கும் ராஜகோபுரத்தின் கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.