குடவாசல் அகர ஓகை காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்த புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
குடவாசல் அகர ஓகையில் விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் இறைவன் விஸ்வநாதர், பிரணவத்தின் மகிமையை இறைவி விசாலாட்சிக்கு தட்சணாமூர்த்தி வடிவத்தில் உபதேசித்த சிறப்பு பெற்றதாகும். இது காசிக்கு நிகரான மிகவும் பழமை வாய்ந்த ஸ்தலமும் ஆகும்.
இத்தலத்தின் திருப்பணி வேலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முழுவதும் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா கடந்த 19-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 21-ம் தேதி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்க்ஷாபந்தனம் மற்றும் முதல் கால பூஜை நடந்தது. 22-ம் தேதி மகாலட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் 2 மற்றும் 3-வது கால பூஜை நடந்தது.
இன்று காலை 6 மணியளவில் 4-வது கால பூஜை நடைபெற்றது. கங்கை, யமுனை, காவேரி, பிரம்மபுத்திரா, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் தமிழ்மணி சிவாச்சாரியார் தலைமையில் கடங்கள் புறப்பட்டு காலை 9 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.