கோப்பணம்பாளையம் சக்கரப்பட்டி சித்தரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா

சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் -பாண்டமங்கலம் செல்லும் சாலையில் சக்கரப்பட்டி சித்தர் (எ) சதானந்த சித்தரின் ஜீவ சமாதி சித்தர் பீடம் உள்ளது. இங்கு 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
குரு பூஜையை முன்னிட்டு சக்கரப்பட்டி சித்தருக்கு காலை 7 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 10 மணியளவில் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வேள்வி தொடங்கியது. 12.30 மணிக்கு கைலாய வாத்தியம், சங்கு நாதத்துடன் பூர்ணாஹுதி சமர்ப்பித்து வேள்வி பூஜை நிறைவு செய்யப்பட்டது.
இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு 251 சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை சக்கரப்பட்டி சித்தர் அன்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






