கார்த்திகை பிரம்மோற்சவ விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா

வாகன வீதிஉலாவின்போது அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், காளைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் ‘யோக நாராயணா’ அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தாயாரை தரிசனம் செய்தனர்.
திருமால், லட்சுமி தாயாருடன் சூரிய மண்டலத்தில் சஞ்சரிக்கிறார். சூரியனின் கதிர்வீச்சுகளால் தாமரை மலர்கள் மலர்கின்றன. அந்தத் தாமரை மலர்களே லட்சுமி தாயாருக்கு உறைவிடங்கள். சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை தரிசிப்பது ஆரோக்கியம், ஐஸ்வர்யம், குழந்தை பாக்கியம் மற்றும் ஞானம் போன்ற பலன்களை முழுமையாக அளிக்கும் என்பதை உணர்த்தவே பத்மாவதி தாயார் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
வாகன வீதிஉலாவின்போது அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், காளைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள், செண்டை மேளம் இசைக்கப்பட்டன. பெண்கள் நாட்டிய, நடன நிகழ்ச்சிகளும், கோலாட்டமும் நடந்தன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சந்திரபிரபை வாகன வீதிஉலா முன்னால் 300 கலைஞர்களை கொண்ட 16 குழுக்கள் பல்வேறு நடனங்களை நிகழ்த்தி பக்தர்களை பிரமிக்க வைத்தனர்.
பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி வீரபிரம்மம், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.






