திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்


பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன வீதியுலா நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் தாயார் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவை நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (25.11.2025) மதியம் 12.10 மணியில் இருந்து 12.20 மணிக்குள் கும்ப லக்னத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் (சக்கரஸ்நானம்) நடைபெற்றது.

இதற்காக, உற்சவர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக புஷ்கரணியை (கோவில் தெப்பக்குளம்) அடைந்தார். உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். புஷ்கரணியின் கரையில் உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்க செய்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது தெப்பக்குளத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.

பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று பத்ம சரோவரம் புஷ்கரணியில் புனித நீராடுவதற்காக தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தடுப்புகள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், வழிகாட்டிப்பலகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கான பாதுகாப்புப் பணியில் 600 தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள், 200 சாரண-சாரணீயர்கள், 200 என்.சி.சி. மாணவர்கள், 900 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், 1,600 போலீசார் என மொத்தம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்ய மொத்தம் 150 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மருத்துவர்கள், பாராமெடிக்கல்கள், முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ்கள், தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பத்ம சரோவரம் புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடும்போது நீரில் மூழ்கி விடாமல் இருக்க தீயணைப்பு, பேரிடர் மீட்பு குழு, நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புஷ்கரணி தீர்த்தத்தின் புண்ணியம் நாள் முழுவதும் நீடிக்கும் என்பதால் பக்தர்கள் தொடர்ந்து புனித நீராட அனுமதிக்கப்படுகின்றனர்.

கார்த்திகை மாத பஞ்சமி நாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார் என்கிறது புராணம். எனவே, தாயார் அவதரித்த புனித பஞ்சமி தினத்தில், அவர் அவதரித்த திருக்குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

1 More update

Next Story