சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்


கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

தஞ்சாவூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, வள்ளி, தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினார்.

பின்னர், கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம், உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கார்த்திகை அன்று (3.12.2025 புதன்கிழமை) திருத்தேரோட்டம், இரவு தங்க மயில் வாகனத்தில் பிரகார உலாவும், அதனை தொடர்ந்து கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி தங்க கவச அலங்காரத்தில் வைர வேலுடன் அருள்பாலித்தார்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சுவாமிநாதன், இந்து சமய அறநிலைத்துறை கோவில் உதவி ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story