திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது: ஜோதியாய் பிரகாசித்த ஈசனை வணங்கிய பக்தர்கள்
கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் இருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். சிவபெருமான் அடி, முடி காண முடியாத ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்து நின்ற தலம் இது. அக்னி ரூபம் எடுத்த சிவனே திருவண்ணாமலையில் அண்ணாமலையாக வீற்றிருக்கிறார். இதனால் இந்த மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர்.
சிவபெருமான் அக்னி பிழம்பாக நின்ற நாள் கார்த்திகை தீபத் திருநாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று (3.12.2025) நடைபெற்றது. மலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்றே மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், காடா துணிகளும் மலைக்கு எடுத்து செல்லப்பட்டன.
இன்று மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் ஏற்றப்பட்டதும் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கின. காடா துணியில் நெய்யை ஊற்றி அதை திரியாக்கி, கொப்பரையில் திரிபோன்று அடுக்கி வைக்கப்பட்டு பிரமாண்ட தீபம் தயார் செய்யப்பட்டது.
மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின வருகை அதிகரித்தது. இதனால் நகரம் முழுவதும் பக்தர்களின் தலைகளாக காட்சியளித்தது. பக்தர்களில் பெரும்பாலானோர் கோவிலை அடைந்ததும் கிரிவலம் சென்று இறைவனை வழிபட்டனர். கிரிவலப் பாதை மட்டுமின்றி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அர்த்தநாரீஸ்வரர்
மாலையில் பஞ்சமூர்த்திகள் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, மகா தீபத்தை காண மலையை நோக்கி அமர்ந்தார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சன்னதியில் இருந்து ஆனந்த தாண்டவம் ஆடியபடியே தங்க கொடிமரத்தின் முன்னால், மலையை நோக்கியபடி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருவார் என்பதால், அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்ததும் பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு அவரை வரவேற்று வணங்கினர்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு கொடிமரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்திலிருந்து, பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர அண்ணாமலையார் உச்சியில் தீபம் ஏற்ற தயாராக இருக்கும் பக்தர்களுக்கு தெரியும்படி உயர்த்தி காட்டப்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்பியபடி வழிபட்டனர். கிரிவலப்பாதையில் இருந்த பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
மகாதீபம் ஏற்றும் வரை திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ விளக்குகளை ஏற்றவில்லை. மின்விளக்குகளையும் போடவில்லை. சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கை ஆன் செய்தார்கள். அத்துடன், வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.









