காரைக்கால்: அகர சேத்தூர் பிரதாப சிம்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

ராஜ கோபுர கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த அகர சேத்தூர் பகுதியில் உள்ளது ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வரர் ஆலயம். பழமை வாய்ந்த இவ்வாலய கும்பாபிஷேகம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு இந்த ஆண்டு ராஜ கோபுர திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மூன்று நிலை ராஜ கோபுர திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று, கடந்த 6ம் தேதி காலை கணபதி ஹோமமும், மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
இன்று அதிகாலை 6ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாஹுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கோபுரத்தை அடைந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய ராஜ கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின்னர் பிரதாப சிம்மேஸ்வரர், சிவகாமி சுந்தரி அம்பாள் உள்ளிட்ட மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக்குழு, அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






