ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக கருடசேவை

பெருமாள் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதி நாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக கருடசேவையை முன்னிட்டு காலையில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருக்குறுங்குடி பர்வதமலையில் நம்பாடுவான் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர் தினசரி திருக்குறுங்குடி நம்பியை பண்ணிசைத்து பாடி வழிபட்டு வந்தார்.
இவ்வாறு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று அழகிய நம்பியை தரிசிப்பதற்காக காட்டு வழியாக வரும்போது பிரம்ம ராட்சஷன் வழிமறித்து பிடித்துக்கொண்டு, “நான் இப்போது உன்னை சாப்பிடப் போகிறேன்” என்றான்.
அவனைப்பார்த்து சற்றும் கலங்காத நம்பாடுவான், “நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். நம்பியை தரிசனம் செய்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன். அதன்பின் என்னை தாராளமாக உண்ணலாம்” என்றான்.
இதை ராட்சஷன் நம்ப மறுத்தான். போனவன் என்றாவது திரும்பி வருவானா என்று கூறி நம்பாடுவானை செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து நம்பாடுவான் 18 விதமான பாவங்களை சொல்லி, திரும்பி வராமல் போனால் இந்த பாவங்களை அடைவேன் என்று சொன்ன பின் ராட்சஷன் சம்மதித்தான்.
அதன்படி நம்பாடுவானும் நம்பியை பண்ணிசைத்து வழிபட்டபின், திரும்பி வந்துகொண்டிருந்தான். அப்போது அவரை சோதிக்கும்பொருட்டு அழகிய நம்பி, மாறுவேடத்தில் வந்து ‘இந்த வழியில் ராட்சஷன் இருக்கிறான். நீ அங்கு போனால் உன் உயிர் போகும், வேறு வழியில் செல்’ என்று கூறுகிறார். ஆனால் நம்பாடுவானோ, உயிர் போனாலும் பரவாயில்லை வார்த்தை தவற மாட்டேன் என்கிறான். நம்பாடுவானின் பக்தி மற்றும் சத்தியத்தை காப்பாற்றுகின்ற உறுதியைக் கண்ட நம்பி, அவனை வாழ்த்தி அனுப்புகிறார்.
அங்கிருந்து புறப்பட்ட நம்பாடுவான் ராட்சஷன் முன் நிற்கிறான். ராட்சஷன் அவனுடைய உயிரை விட்டு அவன் புண்ணியத்தை கேட்கிறான். நம்பாடுவான் உயிரைக் தவிர புண்ணியத்தை தர சம்மதிக்கவில்லை. பின்னர் ராட்சஷன் தான் பிரம்மகத்தி தோஷம் பெற்று இந்த நிலையில் உள்ளதாகவும், உன் போல் ஒருவனால் புண்ணியத்தை பெற்றால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றான். கடைசியாக கைசிக ராகத்தில் பாடிய பாடலின் பலனையாவது தர வேண்டும் என்று மன்றாடினான். நம்பாடுவானும் சரி என்று அந்த பாடலின் பலனைக் கொடுக்க கொடுக்க, பிரம்ம ராட்சஷன் சாப விமோசனம் பெற்றான்.
நம்பாடுவானின் இந்த சரித்திரம் கைசிக புராணம் எனப்படுகிறது. இந்த கைசிக புராணம் ஸ்ரீ வராகப் பெருமானால் பூமி பிராட்டிக்கு சொல்லப்பட்டது. திருக்குறுங்குடியில குடிகொண்டுள்ள நம்பியை கைசிகப் பண் இசையில் பாடியதால் கார்த்திகை வளர்பிறை ஏகாதசியானது, கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஏகாதசியின் சிறப்பை போற்றும் வகையில் கார்த்திகை சுக்ல பட்ச ஏகாதசி விரதமிருந்து துவாதசியன்று கைசிக புராணம் படிக்கப்படுகிறது. அவ்வகையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டு, கைசிக கருட சேவை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி பொலிந்து நின்றபிரான், ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். ஆழ்வார் குறட்டிற்கு நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆசாரியர்கள் எழந்தருளினர். பின்னர் அண்ணாவியார் பாலாஜி ஆதி நாதன், பெருமாள் முன்னிலையில் கைசிக புராணம் வாசித்தார். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது.
அண்ணாவியார் பாலாஜி ஆதிநாதன் மரியாதை செய்யப்பட்டு பிரம்ம ரதத்தில் அவர் திருமாளிகைகக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6 மணிக்கு பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, இரவு 7.30 மணிக்கு மாடவீதி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.
இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜன், உறுப்பினர்கள் கிரிதரன், ராமலட்சுமி. காளிமுத்து, செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.






