மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்


மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
x

தீர்த்தவாரிக்காக காவிரி கரைகளில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் தீர்த்தவாரி நடைபெற்று வந்தது. தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று நடைபெற்றது.

இதற்காக திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை உடனான மாயூரநாதசாமி கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெற்று உற்சவமூர்த்தி காவிரி துலா கட்டத்தை வந்தடைந்தார்.

இதேபோல, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனான ஐயாறப்பர் சாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை உடனான வதாரண்யேஸ்வரர் சாமி, விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர் சாமி கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். அப்போது உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரி விழாவையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 More update

Next Story