ஜெபமே ஜெயம்: துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்


ஜெபமே ஜெயம்: துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்
x

தம்மை நம்பியிருக்கும் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு ஆறுதலைத் தருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். ஒருவரையொருவர் ஆறுதல் படுத்திக்கொண்டும், ஒருவரையொருவர் தைரியப்படுத்திக்கொண்டும் இருக்க வேண்டும்.

வேதாகமத்தில் கர்த்தர் கூறுகிறார்: 'நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்' (ஏசாயா 51:12).

துயர நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள் நம்மை எவ்வளவு ஆறுதல்படுத்தினாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் ஆறுதல் தெய்வீக சமாதானம் ஆகும்.

சில நேரங்களில் திடீரென நமக்கு வரும் துயரத்தை பார்த்து தேவன் சொல்கிறார்: 'இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்' (ஏசாயா 54:7).

எவ்வளவு ஆறுதலான வார்த்தை பாருங்கள். சில நேரங்களில் துன்பங்கள் வந்தாலும் அவர் தரும் ஆறுதல் நிரந்தரமானது.

இன்றைய சூழ்நிலையில் நம் எல்லாருக்குமே ஆறுதல் தேவைப்படுகிறது. ஏனென்றால், சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில் நாம் வாழ்கிறோம். மனிதருக்குள்ளே அன்பு தணிந்து வருகிறது.

வேதம் சொல்கிறது: 'உலகின் கடைசி நாட்களில் அநேகர், சுயநலக்காரர்களாக, பண ஆசை பிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, பொய் பேசுபவர்களாக, கடவுள் நம்பிக்கையற்றவர்களாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, அவதூறு பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக' வாழ்கிறார்கள்.

இவ்வளவு கொடுமையான உலகத்தில் நாம் வாழ்ந்தாலும், தேவன் நம்மை கைவிடாதவராக, தேற்றுகிறவராக இருப்பதால் அவருக்கு ஸ்தோத்திரம். அவர் எல்லா உபத்திரவங்களிலேயும், வேதனைகளிலேயும் நம்மைத் தேற்றுகிறார்.

தாவீது ராஜா சொல்கிறார், 'நான் சிறுமைப்பட்டிருந்த நேரங்களில் உம்முடைய வார்த்தை எனக்கு ஆறுதலாகி அது என்னை உயிர்ப்பித்தது'.

'என் சிறுமையில் எனக்கு ஆறுதலானது உம்முடைய வாக்கு; அது என்னைத் உயிர்ப்பித்தது' (சங்கீதம் 119:50).

வாழ்க்கையில் வரும் அனைத்து சோதனைகளிலும் நம் இதயம் கலங்காமல் தேவனை நம்பிக் கொண்டிருக்கும்போது அவர் நம்மை ஆறுதல்படுத்த போதுமானவராய் இருக்கிறார்.

'உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவன்மேல் விசுவாசமாயிருங்கள்' (யோவான் 14:1).

தம்மை நம்பியிருக்கும் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு ஆறுதலைத் தருகிறார் என்பதில் சந்தேகமே

இல்லை.

வேதாகமத்தில் உள்ள ஒரு சம்பவத்தை பார்க்கலாம். ஆகாப் என்பவர் இஸ்ரவேலின் ராஜாவாக ஆட்சி செய்கிறார். அவருடைய மனைவியின் பெயர் யேசபேல். இவள் கெட்ட எண்ணமும், பிறருடைய பொருளை அபகரிப்பவளும், யாருக்கும் இரங்காமல், எவரையும் கொலை செய்யும் இயல்புடையதான ஒரு பெண்மணி.

இந்த யேசபேல், கர்த்தரின் தீர்க்கதரிசியான எலியாவைக் கொல்ல நினைத்தாள்; அதை அறிந்த எலியா பயந்துபோய் அந்த ஊரைவிட்டே ஓடி வனாந்தரத்திற்கு சென்று வேதனையுடன், 'கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்' என்று வேண்டினார்.

எலியா அப்படிச் சொன்னதற்காக கர்த்தர் அவரை கடிந்துகொள்வதற்குப் பதிலாக ஆறுதல்படுத்தினார்; தீர்க்கதரிசியாகத் தொடர்ந்து சேவை செய்வதற்குத் தேவையான தைரியத்தைக் கொடுத்தார்.

ஆனால் எலியாவைக் கொலை செய்வேன் என்று கூறிய யேசபேல் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக இறந்து போனாள். கர்த்தர் எப்போதுமே தம்மை நம்புகிறவர்களுக்கு இரக்கம் செய்கிறவராகவே இருக்கிறார்.

அவருடைய அன்பு தரும் ஆறுதலுக்கு நாமும் அதிக நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டும். மேலும் நம் அருகில் இருக்கும் சகோதர-சகோதரிகளுக்கு ஆறுதல் தேவை என்று தெரிந்தால், அவர்களுக்காக ஜெபம் செய்யலாம், முடிந்த உதவிகளை செய்யலாம்.

இயேசு கூறுகிறார்: "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்". (மத்தேயு 11:28)

கர்த்தருடைய இளைப்பாறுதல் புத்துணர்ச்சியைத் தரும், துயரப்படும் மனிதர்களிடத்தில் இயேசு எப்படி கனிவாகவும், அன்பாகவும் இருந்தார் என்பதை நாம் கற்றுக்கொண்டு, அதுபோலவே நாமும் மற்றவர்களிடம் அன்பாகவும், கனிவாகவும் இருக்க வேண்டும்.

இந்த உலகில் உள்ள எந்த மனிதரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைவதற்காக இயேசு கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, சிலுவையிலே மரணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார், மரித்தார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதற்கு காரணம் அவர் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் வைத்த அன்பு தான்.

ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் நாமும் மற்றவர்களின் துயரத்தில் பங்கேற்று அவர்க ளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

"உன்னிடத்தில் அன்பு கூருவது போல் பிறனிடத்திலும் அன்பு கூர வேண்டும்" என்ற வேத வசனத்தை வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றுகிறவர்களாக நாம் வாழ வேண்டும், ஆமேன்.

-டாக்டர் ஒய். ஆர். மானெக் ஷா, நெல்லை.

1 More update

Next Story