சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு நாளை மறுநாள் முதல் 10 ஆயிரமாக உயர வாய்ப்பு


சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு நாளை மறுநாள் முதல் 10 ஆயிரமாக உயர வாய்ப்பு
x

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மிகவும் சிரமம் அடைந்தனர்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து சபரிமலையில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாமல் திருவிதாங்கூர் தேவஸ்தானம் திணறியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதுதொடர்பான புகார்களை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டு உத்தரவையடுத்து உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு எண்ணிக்கை தினசரி 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆதலால் தற்போது ஆன்லைன் முன்பதிவு உள்பட தினசரி 75 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக சபரிமலையில் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு டிசம்பர் 20-ந் தேதி வரை முடிவடைந்துள்ளது. கோவிலில் நேற்று வரை 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். டிசம்பர் 20-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

உடனடி தரிசனத்திற்கான முன்பதிவை நாளை (திங்கட்கிழமை) வரை 5 ஆயிரமாக குறைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சபரிமலையில் தற்போது கூட்ட நெரிசல் கனிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து உடனடி முன்பதிவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவை கேரள ஐகோர்ட்டு அனுமதி பெற்று தினசரி 10 ஆயிரமாக அதிகரிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக சபரிமலை மக்கள் தொடர்பு அதிகாரி அருண் தெரிவித்தார்.

சபரிமலையில் தற்போது 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களை தவிர 100-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று கோயம்புத்தூரில் இருந்து 140 பேர் அடங்கிய விரைவு அதிரடிப்படை வீரர்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் பம்பை, சரம்குத்தி, மரக்கூட்டம் சன்னிதானம் ஆகிய இடங்களில் குழுக்கள், குழுக்களாக பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே பீகாரில் தேர்தல் முடிந்ததையடுத்து சபரிமலை பாதுகாப்பு பணிக்கு மத்திய ரிசர்வ் படை வீரர்களும் வர இருப்பதாக மாநில டி.ஜி.பி. ரவா டா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story