குரு பௌர்ணமி.. தோரணமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்


தினத்தந்தி 11 July 2025 12:46 PM IST (Updated: 11 July 2025 12:58 PM IST)
t-max-icont-min-icon

முருகப்பெருமானின் சரண கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் தோரணமலையை வலம் வந்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது. யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது உள்ள குகையில் முருகன் கோவில் அமைந்திருப்பது இந்த தலத்தின் சிறப்பாகும்.

கோவில் அமைந்துள்ள மலையை சுற்றிலும் பக்தர்கள் பௌர்ணமி தோறும் கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது. அவ்வகையில் குரு பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கிரிவலம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். மலை அடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் வல்லப விநாயகரை வணங்கி கிரிவலம் தொடங்கினர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானின் பக்தி பாடல்களை படித்தவாறும், முருகனின் சரண கோஷங்களை எழுப்பியவாறும் பக்தி பரவசத்துடன் சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவுள்ள தோரணமலையை வலம் வந்தனர். பக்தர்களுக்கு மலையடிவாரத்தில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

குரு பௌர்ணமியை முன்னிட்டு மலை மீதுள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story