தர்மபுரி: கீழ்ஈசல்பட்டி நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சிறப்பு அலங்காரத்தில் நாகாத்தம்மன்
கும்பாபிஷேக விழாவில கீழ்ஈசல்பட்டி, மேல்ஈசல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கீழ்ஈசல்பட்டி காட்டுவளவில் உள்ளது ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில். இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 3ஆம் தேதி மங்கள இசை முழங்க கொடி ஏற்றத்துடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.
தொடர்ந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உட்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் காலை 7.30 மணிக்குமேல் 8.30 மணிக்குள் அம்மன் விமான கோபுரம் மற்றும் மூலவர், பாரிவார தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.
விழாவில் கீழ்ஈசல்பட்டி, மேல்ஈசல்பட்டி, பூரிக்கல், பரிகம், ஜருகு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






