2 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை.. திருவண்ணாமலையில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்


2 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை.. திருவண்ணாமலையில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
x

பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.

மேலும் கோவிலில் கலையரங்கம் பகுதியில் கட்டண தரிசன வழியில் செல்லும் பக்தர்களுக்கு என சிறப்பு வரிசை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களின் வரிசையானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் நீண்டு காணப்பட்டது. பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர்.

இன்று பகலில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதேசமயம் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் பக்தர்களின் வரிசையும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்பட்ட வட ஒத்தவாடை தெருவில் பக்தர்களுக்கு இடையூறாக ஆட்டோக்கள் அதிகளவில் சென்று வந்ததாலும் மக்கள் அவதி அடைந்தனர்.

திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர். கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story