உத்திரகோசமங்கை மரகத நடராஜரை இன்று முதல் 4 நாட்கள் சந்தனக்காப்பு இன்றி தரிசிக்கலாம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அபூர்வ நடராஜரை மரகத மேனியராக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்திரகோசமங்கையில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற உலகின் முதல் சிவன் கோவில் என கருதப்படும் மங்களநாதர் சுவாமி – மங்களேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஏப்ரல் 4-ம் தேதி காலை 9:00 முதல் 10:20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு பிரகாரத்தின் அர்த்த, அலங்கார மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள், மரகத நடராஜர் உள்ளிட்ட சன்னதிகளில் திருப்பணிகள் முடிந்துள்ளன. 101 குண்டங்களுடன் யாகசாலை வடிவமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக பூஜை தொடங்கியது. ஆறு கால யாகசாலை பூஜைகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
2010-ல் கும்பாபிஷேகம் நடந்தபோது பச்சை மரகத நடராஜருக்கு சாற்றப்பட்ட சந்தனக்காப்பு களையப்பட்டு மூன்று நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போன்று இந்த ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று மாலை 5:00 மணிக்கு சந்தனக்காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 4-ம் தேதி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.
பொதுவாக மார்கழியில் வரக்கூடிய ஆருத்ரா தரிசனத்தில் மட்டுமே ஆண்டிற்கு ஒருமுறை சந்தனக்காப்பு களைதல் நடக்கும். தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனக்காப்பு களையப்பட்டு தொடர்ந்து 4 நாட்கள் அபூர்வ நடராஜரை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமஸ்தான தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் கூறுகையில், "கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு இன்று மாலை மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு அவருக்கு சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்பு களையப்படுகிறது. 4-ந்தேதி வரை 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும். 4-ந்தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத்தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.