தோரணமலை கிரிவல பாதை அமைக்கும் பணி... காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

தோரணமலை கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட ஸ்தலமாகும். சித்தர்கள் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டது இந்த கோவிலின் சிறப்பு ஆகும்.
இக்கோவிலில் கந்த சஷ்டி, தைப்பூச திருக்கல்யாண திருவிழா, பெளர்ணமி தோறும் கிரிவலம், சூரிய வழிபாடு உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தந்து வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தோரணமலையில் கிரிவலம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். தோரணமலை கோவிலை சுற்றியுள்ள சுமார் 4 கி.மீட்டர் கொண்ட இந்த கிரிவலப் பாதையானது, கரடு முரடான பாதையாக இருப்பதால் கிரிவலம் செல்லும் பாதையில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தோரணமலையில் கிரிவலப்பாதை அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ 1.88 கோடி மதிப்பில் கிரிவலப் பாதைக்கான சாலை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தோரணமலை கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், இந்து சமய அறநிலைத்துறை தென்காசி மாவட்ட உதவி ஆணையர் சரவணக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.






