செங்கல்பட்டு: குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

சிறப்பு பூஜைக்கு பிறகு சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த விட்டிலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட குடிபேரம்பாக்கத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ராம்பிகை சமேத ருத்ரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரத்தில் (திங்கட்கிழமை) ருத்ரேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தையொட்டி இன்று ருத்ரேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதற்கான பூர்வாங்க பூஜை இன்று காலை கோவில் அலங்கார மண்டபத்தில் தொடங்கியது. அங்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. நடுவில் பிரதான கலசமும் வைக்கப்பட்டது. அதன் அருகே யாக குண்டம் அமைக்கப்பட்டு பல்வேறு வேள்வி பூஜைகள் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சங்குகள் அனைத்தும் சிவவாத்தியம் மற்றும் மங்கள இசை முழங்க மூலவர் ருத்ரேஸ்வரர் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அந்த சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






