கார்த்திகை பிரம்மோற்சவ விழா: திருச்சானூரில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

தேரோட்டம் நிறைவடைந்தபின்னர் கிருஷ்ண முக மண்டபத்தில் தாயாருக்கு ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் ‘யோக நாராயணா’ அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
விழாவின் 8-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். பிரமாண்டமான மரத்தேரில் எழுந்தருளி வலம் வந்த பத்மாவதி தாயாரை, மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டம் நிறைவடைந்தபின்னர் தாயாருக்கு ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி வீரபிரம்மம், விஜிலன்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






