திருமலையில் ஆனிவார ஆஸ்தானம்: 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
திருமலை,
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாரம்பரிய முறைப்படி வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யும் தினமான ஆனிவார ஆஸ்தானம் 16-ந்தேதி நடக்க உள்ளது. அதையொட்டி 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்க உள்ளது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கும். அதாவது; ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
15-ந்தேதி காலை 6 மணியளவில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி தொடங்கி 5 மணிநேரம் நடக்கிறது. முன்னதாக பிரதான அர்ச்சகர்கள் ஆகம விதிமுறைபடி பூஜைகள் செய்து மூலவர் ஏழுமலையானை வெள்ளைநிற வஸ்திரத்தால் மூடிவிடுவார்கள்.
அதன் பிறகு தூய்மைப்பணியை தொடங்கி நடத்துவார்கள். கோவில் மூலவர் கருவறை, தங்கக்கொடி மரம், பலிபீடம், தரைதளம், மேற்கூரை, பூஜை பொருட்கள், தூண்கள் போன்றவற்றை தூய நீரால் கழுவி சுத்தம் செய்வார்கள்.
தூய்மைப்பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட வெள்ளைநிற வஸ்திரத்தை அகற்றி விட்டு பூஜைகள் செய்வார்கள். அதன்பிறகு மதியம் 12 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தூய்மைப்பணியால் 15-ந்தேதி அஷ்டதல பாத பத்மாராதனை சேவை மற்றும் 6 மணிநேர தரிசனம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. 14-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஆனிவார ஆஸ்தானம்
16-ந்தேதி காலை 7 மணிக்கு தங்க வாயில் முன் உள்ள கண்டா மண்டபத்தில் சர்வபூபால வாகனத்தில் உபய நாச்சியார்களுடன் மலையப்பசாமியை கருடாழ்வாரை நோக்கி கொலுவாக அமர்த்துவார்கள். விஷ்வக்சேனரை ஒரு தனி மேடையில் தெற்கு நோக்கி கொலுவாக அமர்த்துவார்கள். அதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
திருமலை பெரிய ஜீயர் சுவாமி ஒரு வெள்ளித்தட்டில் 6 பெரிய பட்டாடைகளை தலையில் சுமந்து, மங்கள வாத்தியங்களுடன் மாடவீதி வழியாக கோவிலுக்குள் வந்து மூலவரிடம் சமர்ப்பிக்கிறார். அதில் 4 பட்டாடைகள் மூலமூர்த்திக்கும், ஒரு பட்டாடை மலையப்பசாமிக்கும், மற்றொரு பட்டாடை விஷ்வக்சேனருக்கும் அலங்கரிக்கப்படுகின்றன.
சாவி கொத்து
அர்ச்சகர் ஒருவர் பெருமாள் பாத வஸ்திரத்தால் பரிவட்டம் கட்டி, 'நித்ய ஐஸ்வர்யோபவ' என்று ஆசீர்வதித்து பூஜையை முடிப்பார். பின்னர் அர்ச்சகர் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் மற்றும் தேவஸ்தான அதிகாரிக்கு முறையாக 'லச்சனம்' என்னும் சாவி கொத்தை வலது தோளில் போடுவார்கள். ஆரத்தி, சந்தனம், தாம்பூலம், தீர்த்தம், சடாரி மரியாதைகளுடன் அந்தச் சாவியை மூலவர் ஏழுமலையான் பாதத்தில் வைக்கப்படும். அதன்பிறகு கோவிலில் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை படித்துக் காட்டுவார்கள்.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை அழகாக அலங்கரித்து புஷ்ப பல்லக்கில் அமர்த்தி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
ஆனிவார ஆஸ்தானத்தால் 16-ந்தேதி கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
இதற்காக 15-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இதை, பக்தர்கள் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.