முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் அமாவாசை விரத வழிபாடு
இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மறைந்த முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். அமாவாசை விரதங்களில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசை ஆகிய மூன்றும் விசேஷமானவை. அமாவாசையன்று, காலையில் எழுந்து குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.
அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம்பெற்றிருக்கும். விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். படையலில் புதிய ஆடைகளையும் வைக்கலாம்.
பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். தரையிலோ, எட்டும் இடங்களிலோ வைத்தால் வேறு விலங்குகள் சாப்பிட்டுவிடும். முன்னோர்களுக்குப் படைக்கும் உணவுகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்டபிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவுமுறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
இறந்தவர்களுக்கு படைத்த ஆடைகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் பயன்படுத்த வேண்டுமே தவிர, பிறருக்கு தானமாகத் தரக்கூடாது. அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது. பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.