ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

நாளை மறுநாள் முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத வழிபாட்டுக்காக நாளை (16-7-2025) சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இதற்காக 11-ந்தேதி திறக்கப்பட்ட கோவில் நடை 13-ந்தேதி இரவு சாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (17-ந்தேதி) முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம் மற்றும் படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இம்மாதம் 21-ந் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியுள்ளது. 21-ந்தேதி பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாற்றப்படுகிறது.