சாக்கோட்டை வீரசேகரர் கோவில்

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வீரசேகரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது, வீரசேகரர் திருக்கோவில். இத்தலத்தின் மூலவராக வீரசேகரரும், இறைவியாக உமையாம்பிகை தாயாரும் உள்ளனர். கோவில் தல விருட்சமாக வீரை மரமும், தீர்த்தமாக சோழா குளமும் உள்ளன.
தல சிறப்பு
ஒரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. ஒரு நாள் இங்கு வாழ்ந்து வந்த வேடன் ஒருவன், ஒரு மரத்தின் அருகில் இருந்த வள்ளிக்கிழங்கின் கொடியை கடப்பாரை கொண்டு தோண்டினான். அப்போது அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேடன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது லிங்கம் ஒன்று இருந்தது.
இந்த அதிசய நிகழ்வை வேடன் மன்னனிடம் கூறினான். அந்த நேரத்தில் மன்னன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். வேடன் சொன்னதைக் கேட்ட மன்னன், சிவபெருமானின் திருவிளையாடலை அறிந்து, அவ்விடத்திலேயே கோவில் கட்டினான். பிறகு மன்னனின் நோயும் குணமடைந்தது.
ஒரு முறை இத்தலம் வந்த பாண்டிய மன்னன் ஒருவன், சிவபெருமானின் சக்தி குறித்து சந்தேகம் கொண்டான். அந்த மன்னன், சுவாமியை முதல் முறை வலம் வந்தபோது, அங்கிருந்த வீரை மரம், பலா மரமாக மாறியது. இதைக் கண்டு அதிசயித்த மன்னன், தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கோரினான்.
அப்போது சிவபெருமான், “அந்த மரத்தில் இருக்கும் கனியை உண்டால் உனது நோய்கள் நீங்கும்" என்று கூறினார். இதையடுத்து, அந்த மரத்தில் இருந்த பழத்தை உண்டவுடன் மன்னனின் நோய்கள் நீங்கின. அம்மரமும் மீண்டும் வீரை மரமாகவே மாறியது. சிவ பெருமானை வணங்கிவிட்டு, இந்த மரத்தை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஒரு சமயம் பக்தன் ஒருவன் தன்னிடம் இருந்த பசுக்களில் சிலவற்றை அந்தணர் ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டு, மீதியை மற்றொருவருக்கு விற்றார். அந்தணருக்கு தானமாக கொடுத்த பசுக்கள், விற்கப்பட்ட பசுக்களை தேடி சென்றன. பசுக்களை வாங்கியவர், பேராசை காரணமாக அந்த பசுக்களையும் சேர்த்து தொழுவத்தில் கட்டினார். பசுக்களை தேடி வந்த அந்தணர், அவரிடம் பசுக்களை கேட்டபோது, அவர் தர மறுத்து விட்டார்.
இவ்வழக்கு மன்னனிடம் சென்றது. மன்னன் இருவரையும் இத்தலத்து இறைவனை சாட்சியாக வைத்து, உண்மை கூறி தீர்த்தத்தில் மூழ்கி எழும்படி செய்தார். அதன்படி, இருவரும் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும், அந்தணரை ஏமாற்றிய நபர் கண் பார்வையை இழந்தார். பின்பு, அவன் பசுக்களை திருப்பி ஒப்படைத்துவிட்டு, இத்தல இறைவனை தொழுது மன்னிப்பு பெற்றான்.
பேராசை கொண்டவர்கள், ஏமாற்றுபவர்களை இத்தல இறைவன் உடனடியாக தண்டிப்பார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
கோவில் அமைப்பு
கோவில் 9 நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இத்தல இறைவன் வீரசேகர சுவாமி என்ற திருநாமத்துடன் சுயம்புலிங்கமாக தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இறைவி உமையாம்பிகை தாயாரும் தனிச் சன்னிதியில் காட்சி அளிக்கின்றார். இங்குள்ள விநாயகர், விக்கிரம விஜய விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சண்டிகேஸ்வரர், முருகன், நடராஜர், சோமாஸ்கந்தர், நந்தி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இக்கோவிலில் வீற்றிருக்கும் பைரவர், இரட்டை நாய் வாகனத்துடன் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.
புழுங்கல் அரிசி சாதம் நைவேத்தியம்
மதுரையை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனிடம் பணியாற்றி வந்த மாணிக்கவாசகர், ஒரு முறை குதிரை வாங்க சென்றபோது இவ்வழியாக வந்தார். அப்போது இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானுக்கு புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்தியமாக படைத்தார். அன்று முதல், இக்கோவிலில் முக்கிய நைவேத்தியமாக புழுங்கல் அரிசி சாதம் படைக்கப்படுகிறது.
திருவிழா
இக்கோவிலில் ஆனி மற்றும் ஆடி மாதங்களில் பத்து நாள் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும், சிவராத்திரி, கந்தசஷ்டி போன்ற விழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அமைவிடம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 11 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.






