வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர்


வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர்
x

திருநாராயணபுரம் தலத்தில் சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

திருச்சி

திருச்சி அருகே திருநாராயணபுரம் எனும் ஊரில் வேதநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வேதநாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன் வேதநாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.

ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து சிலகாலம் கழித்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். அப்போது அவர், தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு பெருமாள், இத்தலத்தில் வேதங்களை உபதேசித்து, பின்பு இங்கேயே பள்ளிகொண்டார். அதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘வேதநாராயணர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

பிற்காலத்தில் இங்குள்ள சுவாமியின் சிலை மண்ணால் மூடப்பட்டது. ஒரு சமயம், இவ்வூருக்கு வந்த வானவராயர் என்ற மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதாக உணர்த்தி உள்ளார். இதையடுத்து அந்த சிலையை கண்டெடுத்த மன்னர், கோவிலும் கட்டினார்.

இரணியனை அழித்தபோது உக்கிரமாக காட்சி அளித்த நரசிம்மர், பிரகலாதனுக்கு இத்தலத்தில் சாந்த ரூபமாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் உள்ளனர்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலின் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதி மக்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாராவது பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ இங்குள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பு சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.

திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனுக்கு துளசி மாலை அணிவித்து, 27 அகல் விளக்கு ஏற்றி ஜாதகத்தை பெருமாள் திருவடியில் வைத்து வழிபட்டு செல்கின்றனர். தோஷம் உள்ளவர்கள், தங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இந்த வழிபாட்டை செய்வது விசேஷமாகும்.

திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்திற்கு அருகில் உள்ள திருநாராயணபுரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story