திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல்பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தல இறைவன் திருத்தளிநாதர் என்றும், இறைவி சிவகாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் உள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் வெண்ணிற பட்டாடை அணிந்து காட்சி தருவது கோவிலின் தனிச் சிறப்பாகும்.
தல புராணம்
முன்னொரு காலத்தில் வால்மீகி, கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இவர் மனந்திருந்தி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். நீண்டகாலம் தவம் இயற்றியதால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சி கொடுத்தார்.
புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் 'புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இக்கோவில். புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், இத்தலம் 'புத்தூர்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் 'திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருப்புத்தூர்' என்றாகி, அதுவே மருவி 'திருப்பத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோவில் கட்டினர்.
யோக பைரவர்
சிவ பக்தனான இரண்யாட்சனுக்கு அந்தகாசுரன், சம்பகாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். இதனால் வருந்திய தேவர்கள் சிவபெருமானை நாடினர். சிவபெருமான் பைரவராக விஸ்வரூபம் எடுத்து, அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். அசுரர்கள் என்றாலும் அவர்கள் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். அவரே இத்தலத்தில் 'யோகபைரவராக' காட்சி தருகிறார்.
இந்த பைரவர் வலதுகரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது சிறப்பானதாகும். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும், எல்லாவித தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம்.
தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள். வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது.
இந்திரனின் மகன் ஜெயந்தனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான். தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோவிலில் தனிச் சன்னிதி இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஜெயந்தனுக்கு இங்கு விழா எடுக்கப்படுகிறது.
‘யோகநாராயணர்
மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இவர், 'யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர். ராகு, கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னிதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர்.
சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தட்சிணாமூர்த்தி, சீடர்கள் இல்லாமல் காட்சி அளிக்கிறார். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இக்கோவில் திறந்திருக்கும்.
அமைவிடம்
சிவகங்கையில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோவில் உள்ளது.








