திருவிடைக்கழி முருகன் கோவில்


திருவிடைக்கழி முருகன் கோவில்
x
தினத்தந்தி 25 July 2025 6:00 AM IST (Updated: 25 July 2025 6:00 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைக்கழி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டால், ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் விலகி நிறைவான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

மயிலாடுதுறை

முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, அவரது காலடி பட்ட தலங்கள் மூன்று மட்டுமே. அதில் ஒன்று, பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய 'திருவிடைக்கழி'.

முருகப்பெருமான் பாவ விமோசனம் பெறுவதற்காக, இத்தலத்தில் சிவபூஜை செய்து வழிபட்டபோது, அவருடன் தெய்வானை, அன்னை ஆதிபராசக்தி மற்றும் தேவர்களும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தனர். சிவபெருமான் மனம் மகிழ்ந்து அருள, சிவனின் திருவடி வணங்கி பின் விடைபெற்று திருப்பரங்குன்றம் சென்றனர். இவ்வாறு விடைபெற்று சென்றதால் இத்தலம் 'திருவிடைக்கழி' என பெயர் பெற்றது.

தல புராணம்

திருச்செந்தூரில் சூரபத்மன், தாரகாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்தபின் முருகப்பெருமான் திருச்செந்தூரில் தங்கியிருந்தார். தேவர்களின் சேனாதிபதியான முருகனுக்கு தெய்வானையை மணமுடித்துக் கொடுக்க ஏற்பாடு நடந்தது. அப்போது சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசுரன், தன் உருவை சுறா மீனாக மாற்றிக் கொண்டு, தற்போது மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியில் உள்ள கீழ்ச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான்.

இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளான தேவர்கள், இரண்யாசுரனையும் அழித்தால்தான் அரக்கர்களின் கொடுமையில் இருந்து விடுபட முடியும் என முருகப்பெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்தர்களை காக்கும் பொருட்டு முருகன், கீழ்ச்சமுத்திரம் வந்தார். ஆனால் கடலில் ஏராளமான சுறா மீன்கள் தென்பட்டன.

இரண்யாசுரன் எந்த சுறா மீன் உருவில் மறைந்துள்ளான் என்பது தெரியாமல் முருகன் தயங்கி நின்றார். அவர் தயங்கி நின்ற இடமே 'தயக்கம்பாடி' எனப்பெயர் பெற்று, பின்னர் மருவி 'தரங்கம்பாடி' என்றானது. அந்த சமயம் தரங்கம்பாடியில் எழுந்தருளியிருந்த ஞான சக்தி திருக்காமேஸ்வரி, அரக்கனைக் கொல்ல முருகனுக்கு வஜ்ரவேல் கொடுத்தார். அவரது ஆசியுடன் முருகப்பெருமான் மாயையால் மறைந்திருந்த இரண்யாசுரனை சம்ஹாரம் செய்தார்.

சிவ பக்தனாகிய இரண்யாசுரனை சம்ஹாரம் செய்ததால் முருகனுக்கு பாவ தோஷம் ஏற்பட்டது. அது நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவண பொய்கையில் நீராடி சிவ பூஜை செய்யும்படி முருகனுக்கு ஞான சக்தி அம்மையார் உபதேசம் செய்தார். அதன்படி முருகன் கடலாழியாற்றின் வடகரை வழியாக, பிடவூர் என்ற இடத்தில் சென்றபோது, இத்தலத்தில் இருந்த விநாயகரை, முருகன் வழிபட தவறிவிட்டார். தன்னை நினைவில் கொள்ளாமல் சென்ற குமரனை, இத்தலத்திற்கு வரச்செய்ய, கடலாழியாற்றில் பெரும் வெள்ளம் வரும்படி செய்தார், விநாயகப் பெருமான்.

இதனால் மறுகரைக்கு செல்ல முடியாமல் முருகப் பெருமான் தவித்தார். பின்னர் தன் சகோதரர் விநாயகரை நினைத்து 500 பாடல்களை பாடினார். இதனால் மனம் மகிழ்ந்து தன் துதிக்கையால் குமரனை தூக்கி தென்கரையில் விட்டார் விநாயகர். இதனால் இத்திருத்தல கோவிலுக்கு நேர் எதிரே மேற்கு திசையில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு "ஐந்நூறு விநாயகர்" என பெயர் ஏற்பட்டது.

தென்கரைக்கு வந்த முருகன் நான்கு திசையின் எல்லைகளிலும் அய்யனாரை காவல் வைத்தார். பின்னர் இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். சிவபெருமானும் தன்னை வழிபட்ட குமரனின் பாவதோஷத்தை நீக்கி அருளாசி வழங்கினார். அப்போது முருகன், "என் பாவத்தை நீக்கி அருள் வழங்கியதை போல் சகல தோஷத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு வந்து வணங்கும் பட்சத்தில், அவர்கள் பாவங்களை நீக்கி அருள வேண்டும்" என்று சிவனிடம் வேண்டினார்.

அதற்கு சிவன் "அப்படியே ஆகட்டும்" என்று வரமளித்தார். பின்னர் பாவ தோஷம் நீங்கிய முருகப்பெருமான், தன் தந்தையை வணங்கி விடைபெற்று திருப்பரங்குன்றம் சென்றார். அங்கு தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம், முருகனின் முன்னால் ஸ்படிக லிங்கமாக உள்ளது. இத்திருத்தலத்தில் தல விருட்சமாகிய குரா மரத்திற்கு எதிரே, மேற்கு திசையில் திருக்காமேஸ்வரர் சன்னிதி உள்ளது. இதுதான் ஆதித் திருக்கோவிலாக விளங்கியது. தன்னை நினைத்து குரா மரத்தடியில் அமர்ந்து பூஜித்து வந்த சுப்பிரமணிய சுவாமியை மூலவராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருளுமாறு கூறினார் சிவன்.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றால் கொடிமரமும், பலி பீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. தலவிருட்சம் 'குரா மரம்'. குரா மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.

உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியோரை வணங்கலாம். கருவறையில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமியும், அவருக்கு பின்புறம் வடமேற்கு மூலையில் ஸ்ரீ பாபவிநாசப் பெருமானும் (சிவபெருமான்) சேர்ந்தே அருள்பாலிக்கிறார்கள்.

யானை வாகனம்

இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடியும் உள்ளன. இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்திருத்தலத்தில் தெய்வானை தென்திசை நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கிறார். அந்த அன்னை குமரன் நிற்கின்ற திசையை நோக்கி திருமுகம் திருப்பிய நிலையில் எழுந்தருளியுள்ளார். "முருகன் எப்போது சிவபூஜை முடித்து தன்னை கரம் பிடிப்பார்" என்று அவர் நினைக்கும் மனநிலையை இது தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தோஷங்கள் விலக..

இத்தல முருகனை வழிபட்டால், ஜாதக ரீதியாக உள்ள மாங்கல்ய தோஷம், நாக தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி நிறைவான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.

தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

கோவில் அமைவிடம்

சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடையூருக்கு தென் மேற்காக 6 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story