திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்


திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்
x

பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக தூது சென்றதால், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ளது, பாண்டவதூத பெருமாள் கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் 108 திவ்யதேச வைணவ தலங்களில் 49-வது கோவிலாகும். இங்கு, பாண்டவர்களுக்காக துரியோதனிடம் தூது சென்ற கோலத்தில் கிருஷ்ண பகவான் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் விஸ்வரூபமாக காட்சி தருகிறார்.

தல புராணம்

மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர், கௌரவர்களின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தன் செல்வங்களையும், நாட்டையும் இழந்தார். பின்பு கவுரவர்கள், பாண்டவர்களை 13 வருடம் வனவாசம் செல்ல செய்தனர். வனவாசம் சென்று திரும்பிய நிலையில் பாண்டவர்கள், ஐவருக்கும் 5 ஊர் இல்லையென்றாலும், 5 வீடாவது தர வேண்டும் என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார். பாண்டவர்களின் பலமே கிருஷ்ணர்தான் என்பதை அறிந்திருந்த துரியோதனன், அவரை அவமானப்படுத்த எண்ணினான். இதற்காக, அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக அமைக்கப்பட்ட ஆசனத்தின் முன்பாக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப் போட்டு மறைத்தனர்.

அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த கிருஷ்ண பகவான், தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். உடனே, கிருஷ்ணர் தான் அமர்ந்த ஆசனத்துடன் பள்ளத்தில் விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த துரியோதனன், அவரை கொல்ல காவலர்களிடம் உத்தரவிட்டார். உடனே அவரைத் தாக்க சில மல்லர்கள் முயன்றனர். மல்லர்கள் பள்ளத்திற்குள் இறங்கியவுடன் கிருஷ்ணர் அவர்களை அழித்து, தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டி ஒங்கி உயர்ந்து நின்றார். அதைப் பார்த்த அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர். பாண்டவர்களுக்காக தூது சென்றதால் கிருஷ்ணர், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

பாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு, பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் மகரிஷியிடம், தனக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை கூறும்படியும் வேண்டினார்.

அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார், அரசர். தவத்தின் பயனாக பெருமாள், தன் பாண்டவதூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார். மேலும், திருதராஷ்டிரனுக்கும் கண நேரம் கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி அருளினார் என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களால் புனரமைக் கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரின் காலத்தில் கோவிலின் சுற்றுச் சுவர் உள்ளிட்டவைகள் எழுப்பப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டவதூத பெருமாள் 'தூத ஹரி' என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.

கோவில் ராஜகோபுரம் நுழைவுவாசலில் பழமையான அற்புதமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி பலிபீடம், கொடிமரம் காணப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான இக்கோலிலில் மூலவர் பாண்டவதூதர் 25 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் புன்னகையோடு காட்சி தருகிறார்.

மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அற்புதமான காட்சியாகும். வலது காலை மடக்கி, அர்த்த பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போல் நான்கு கரங்களுடன் இல்லாமல், இரண்டு திருக்கரங்களுடனேயே அருள்பாலிக்கிறார். வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் வரதமுத்திரை காட்டியும் உள்ளது.

இத்தலத்தில் திருமாலின் உற்சவர் சிலைகளில் ஸ்ரீதேவி பூதேவிக்கு பதிலாக ருக்மணி, சத்தியபாமா இருவரும் எழுந்தருளியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகிய உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் காணலாம்.

இக்கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ராமானுஜர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். மூலவருக்கு தெற்குபுறம் ருக்மணிக்கு தனிச் சன்னிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் தனிச் சன்னிதியில் நரசிம்மர் காட்சி அளிக்கிறார். கோவிலின் வடகிழக்கு பகுதியில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோடி ஏகாதசி, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கூடவே இருந்து உதவி செய்தது போல், இத்தலத்து இறைவனை வணங்கினால் கஷ்டப்படும் பக்தர்களை கை கொடுத்து காப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

கிருஷ்ணன், இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலமாக இருப்பதால் இங்கு அடிப்பிரதட்ச ணம், அங்கப்பிரதட்சணம் செய்ப ர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

பாண்டவதூத பெருமாளை வணங்குபவர்களுக்கு காரியத் தடை, திருமணத் தடை நீங்குவதோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

காஞ்சிபுரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஏராளமான பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

ரோகிணி தேவி வழிபட்ட பெருமாள்

27 நட்சத்திரங்களில் ஒருவரான ரோகிணி தேவி, கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். சந்திரன், 27 நட்சத்திர தேவியர்களை மணம்முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டபோதும், முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோகிணியையும், அடுத்து அக்னி சக்தி பெற்ற கார்த்திகையையும் மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்ததாக கூறப்படுகிறது. ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி, திருப்பாடகம் தலத்திற்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன், சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளிலும் இங்கு வந்து அர்ச்சனை செய்தால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

1 More update

Next Story