கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்


கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்
x

பித்ருக்களால் ஏற்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.

திருச்சி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தின்னக்கோணத்தில் அமைந்துள்ளது, சுயம்பு பசுபதீஸ்வரர் கோவில். இத்தல இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீஸ்வரரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலனை தரக்கூடிய தலமாக இக்கோவில் உள்ளது.

தல சிறப்பு

ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு வேதங்களின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது பார்வதி தேவியின் கவனம் அருகில் இருந்த காமதேனுவின் மீது சென்றது. அதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி, இத்தலத்தில் தவமிருந்து மீண்டும் இறைவனை அடைந்தார். அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோவிலின் கருவறைத் தூண்கள் நான்கும், நான்கு வேதங்களை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

கோவில், நுழைவுவாசலுடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. பலிபீடமும், நந்தியும் கருவறையை நோக்கி காணப்படுகிறது. இத்தலத்து இறைவன் பசுபதீஸ்வரர் பசு வடிவில் சுயம்புவாக கிழக்கு மேற்காக காட்சி அளிக்கிறார். பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், உடலை சுற்றி வஸ்திரங்கள் சாத்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார். அருகில் லிங்க திருமேனியும் உள்ளது.

கோவிந்தவல்லி தாயார்

மூலவர் பசுபதீஸ்வரர், கேதார்நாத் இறைவனைப் போல பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலையில் அமைந்துள்ளதால், இத்தலம் 'தென் கேதார்நாத்' என்று போற்றப்படுகின்றது. எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், தின்னக்கோணம் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், கேதார்நாத் சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இறைவன் பசுபதீஸ்வரரின் வலது பக்கத்தில் நான்கு தூண்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இப்படி மூலவரின் பக்கத்தில் தூண்கள் அமைந்திருப்பதை வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச்சிறப்பாகும். கருவறை சுவரை சுற்றி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் கோஷ்ட மூர்த்திகளாக காட்சி அளிக்கின்றனர்.

கோவிந்தவல்லி தாயார் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். அன்னை சிவகாம சுந்தரி, கோவர்த்தனாம்பிகை போன்ற திருநாமங்களிலும் அழைக்கப்படுகிறார். வலம்புரி விநாயகர், சங்கரநாரயணர், லட்சுமி நாராயணர், சிவசக்தி வேலன், வள்ளி, தெய்வானை, பைரவர், சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன. இக்கோவிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

பிரார்த்தனை

பித்ருக்களால் ஏற்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது. பசுவுக்கு ஏதாவது தீங்கு இழைத்து அதனால் சாபம் பெற்றவர்கள், இக்கோவிலுக்கு பசுவும், கன்றும் தானமாக வழங்குகிறார்கள். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். கோவிலில் மாத சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோவில்.

1 More update

Next Story