தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்

தாளக்கரை ஆலயத்தின் கருவறையில் மூலவர் நரசிம்மரும் மகாலட்சுமி தாயாரும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
லட்சுமி நரசிம்மராக காட்சி தரும் தலங்களில், தாயார் நரசிம்மரின் மடியில் அமராமல் அருகில் தனியே நின்றபடி காட்சி அளிக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகவும், லட்சுமி நரசிம்மர் தலையில் ஆதிசேஷன் காட்சி தரும் அற்புத தலமாகவும், கிரக தோஷங்களை போக்கும் சர்ப்ப விநாயகர் உள்ள தலமாகவும் உள்ளது தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்.
தல சிறப்பு
இரணிய கசிபு என்னும் அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்மர். பக்த பிரகலாதனின் தந்தையான இரணியன், யாராலும் அழிக்க முடியாதபடி வித்தியாசமான வரம் பெற்றிருந்தான். இதனால் திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். அப்போது அவர் மிக உக்கிரமாக இருந்தார். அவரின் உக்கிரத்தை தணிக்க எண்ணிய மகாலட்சுமி, அவரது மடியில் அமர்ந்தார். இதையடுத்து நரசிம்மர் சாந்தமானார்.
இதன் அடிப்படையில் லட்சுமி நரசிம்மர் கோவில்களில் சுவாமியின் மடியில், மகாலட்சுமி அமர்ந்திருப்பார். ஆனால், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் தலத்தில் மகாலட்சுமி, சுவாமிக்கு இடதுபுறம் தனியே இருக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோலத்தில் நரசிம்மர், மகாலட்சுமியை காண்பது அரிது. இந்த கோவில் 8-ம் நூற்றாண்டில் தோன்றியதாக தல வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு
இயற்கை எழில் சூழ்ந்த தோட்டம் மற்றும் வயல்வெளிகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கிழக்கு, வடக்கு என இரு வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்து, சிறிது தூரம் சென்றவுடன் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது. இது பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரை குறிக்கும் விதமாக மூன்று கிளைகளுடன் இருக்கிறது. பெருமாள் கோவிலில் வில்வ மரம் தலவிருட்சமாக மூன்று கிளைகளுடன் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
தல விருட்சத்தை வணங்கிவிட்டு கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம் உள்ளன. அவற்றிற்கு இடது புறமாக தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் சர்ப்ப விநாயகரை தரிசிக்கலாம். பெரும்பாலான கோவில்களில் வெளிப்புறத்தில் காணப்படும் விநாயகர், இத்தலத்தில் உள்பிரகாரத்தில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் என்ற நிலையில் உள்ளார். பெருமாள் தலங்களில் சுவாமி, ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் காட்சி தருவார். சுவாமி நின்ற கோலத்தில் இருக்கும் தலங்களில், ஆதி சேஷன் அவருக்கு குடையாக தலைக்கு மேலே இருப்பார்.
ஆனால் இங்கு விநாயகரின் தலையில் ஆதிசேஷன் குடையாக அமைந்துள்ளார். இதனால் இத்தலத்து விநாயகர் ‘சர்ப்ப விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். இத்தகைய கோலத்தை காண்பது அரிது. பெருமாளுக்கான கோவில் என்பதால் இவர் ஆதிசேஷனுடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். எனவே ராகு, கேது, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் தோஷங்கள் நீங்கப் பெறும் என்பது நம்பிக்கை. இந்த விநாயகர் சன்னிதிக்கு வெளியே நாகர் சன்னிதிகள் உள்ளன.
அதற்கு அடுத்து வடக்கு முகமாக வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சுவாமியின் ஈசானிய மூலையில் சிறிய அளவில் மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளமும், அதற்கு அருகில் தீர்த்த கிணறு ஒன்றும் இருக்கிறது. துவார பாலகர்களான விஜயன், ஜெயன் ஆகியோரை அடுத்து, லட்சுமி நரசிம்மருக்கு எதிரில் கை கூப்பிய நிலையில் கம்பீரமும், அழகும் நிறைந்து, பணிவுடன் பகவானை வணங்கி நிற்கும் கருடாழ்வார் உள்ளார்.
கருவறையில் மூலவர் நரசிம்மரும் மகாலட்சுமி தாயாரும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இத்தகைய நின்ற கோலத்தில் உள்ள அமைப்பு ஆந்திராவில் உள்ள யாதகிரி குட்டாவில் காணலாம். நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் கோரைப்பற்களுடன் காணப்பட்டாலும் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மகாலட்சுமியின் சகோதரனான சந்திரன் இங்கு சுவாமிக்கு விமானமாக இருந்து காப்பதாக ஐதீகம்.
ஆகவே மூலவரின் மேல் உள்ள விமானம் ‘சந்திர விமானம்’ எனப்படுகிறது. மூலஸ்தானத்தில் நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமம் இருக்கிறது. இந்த சாளக்கிராமமே, முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை ‘ஆதிமூர்த்தி’ என்கிறார்கள்.
சொர்க்கவாசல் (பரமபதம்) வழியாக பக்தர்கள் வருவது போல் இக்கோவில் அமையப்பெற்று உள்ளதால், பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது. இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. ‘தாளம்’ என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத்தலம் ‘தாளக்கரை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய அளவில் அன்னதான கூடம் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் அன்னதானம் மிகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
பிரார்த்தனை
தீராத கடன் தொல்லைகளை தீர்க்கவும், குடும்ப ஒற்றுமை மற்றும் குடும்ப வளர்ச்சிக்காகவும், திருமணத்தடை, புத்திர பாக்கியம், ஏவல், பில்லி, சூனியம் நீங்கவும், மன நிம்மதிக்காகவும் இக்கோவிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
பிரார்த்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள் இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபடுவதோடு துலாபார காணிக்கை கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை, ஞாயிற்றுக்கிழமை பரிகார பூஜை ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆலயம், காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தாளக்கரை என்னும் ஊரில் அமைந்துள்ளது, லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்.