ராமபிரானின் மகிமையை பிரதிபலிக்கும் கோவில்கள்


ராமபிரானின் மகிமையை பிரதிபலிக்கும் கோவில்கள்
x
தினத்தந்தி 18 April 2025 6:00 AM IST (Updated: 18 April 2025 6:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் ராமருடன் தொடர்புள்ள ஆலயமாகவும், புனிதத் தலங்களில் மிக முக்கியமான தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது.

ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரில், சரயு நதியின் அருகில் பிரமாண்ட பால ராமர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தியா முழுவதும் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. ராமரின் மகிமையை பிரதிபலிக்கும் கோவில்களும், ராமருடன் தொடர்புடைய கோவில்களும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஆலயங்களை பார்ப்போம்.

சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று. தெலுங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் பத்ராசலம் என்ற இடத்தில் இந்தக் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தை 'பத்ராசலம் கோவில்' என்றால்தான் அனைவருக்கும் தெரியும். வனவாசம் மேற்கொண்ட ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும், ஒரு முறை பத்ராசலத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பர்ணசாலையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர்தான் ராவணனால் சீதை கடத்தப்பட்டது, சீதையை மீட்பதற்காக, இலங்கை செல்லும் வழியில் ராமரும், லட்சுமணரும் கோதாவரி ஆற்றைக் கடந்த நிகழ்வுகளும் நடந்தன. அந்த புராணத்தின்படி அமைந்த இடம்தான் பத்ராசலம் ஆலயம். ராமநவமி மற்றும் ராம- சீதா திருமண நாளில் இந்த ஆலயம் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் காணப்படும்.

ராமசுவாமி கோவில்

தமிழ்நாட்டில் ராமருடன் தொடர்புள்ள ஆலயமாகவும், இந்தியாவின் புனிதத் தலங்களில் மிக முக்கியமானதாகவும் திகழ்கிறது, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில். இது சிவபெருமானுக்குரிய ஆலயமாக இருந்தாலும், இங்குள்ள சிவலிங்கத்தை மணலில் செய்தவர், சீதாதேவி. அதற்கு பூஜை செய்தவர் ராம பிரான் என்பதே இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.

கும்பகோணத்திலும் ராமசுவாமி கோவில் என்ற பெயரில் ராமருக்கு ஒரு ஆலயம் இருக்கிறது. 400 ஆண்டு பழமையான இந்த ஆலயம், ரகுநாத நாயக்கர் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் ராமாயண காவியத்தின் ஓவியங்களாலும், சிற்பங்களாலும் நிரம்பியுள்ளது. நுணுக்கமான கலைப்படைப்புகளை இந்தக் கோவிலில் நாம் காண முடியும். கருவறையில் ராமரும், சீதா தேவியும் திருமண கோலத்தில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். இவர்களுடன் சத்ருக்னன் ராமரின் இடது புறத்தில் சாமரத்தை வீசியபடியும், பரதன் குடை பிடித்தபடியும், லட்சுமணன் வலது புறத்தில் நின்றபடி கையில் வில்லை பிடித்த நிலையிலும் இருக்கின்றனர். அவர்களுடன் அனுமனும் உள்ளார். இங்கு வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

காலாராம் கோவில்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரின் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். ராமர் வன வாசத்தின்போது வாழ்ந்த இடத்திலேயே இந்த கோவில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பழமையான மரத்தால் ஆன ஆலயம் இருந்த இடத்தில், சர்தார் ரங்கராவ் ஓதேகர் என்பவரால், 17-ம் நூற்றாண்டில் தற்போதைய ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலய கட்டுமானப் பணி சுமார் 12 ஆண்டு காலம் நீடித்திருக்கிறது. மேற்கு இந்தியாவில் அமைந்த மிகச் சிறந்த ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரது சிலைகள் கருங்கற்களால் ஆனவை. இவை ஒவ்வொன்றும் சுமார் 12 அடி உயரம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திரிபிராயர் கோவில்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள மூலவரான ராமபிரான், 'திரிபிரயாரப்பன்' அல்லது 'திரிபிராயர் தேவர்' என்று அழைக்கப்படுகிறார். புராணத்தின்படி, இந்த ஆலயத்தில் உள்ள ராமபிரானை, துவாபர யுகத்தின்போது கிருஷ்ணர் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் இறுதி காலத்தில் துவாரகை கடலில் மூழ்கியபோது, இந்த சிலையும் கடலில் மூழ்கி, கேரளாவின் செட்டுவா கடலில் இருந்து மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அங்கிருந்த ஆட்சியாளரிடம் அந்த சிலையை கொடுக்க, திரிபிரயாரில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உண்டாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ராம பிரான் நான்கு கரங்களுடன் உள்ளார். கரங்களில் சங்கு, வட்டில், வில், மாலை ஏந்தியபடி காட்சி தருகிறார்.

புவனேஸ்வர் ராமர் கோவில்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கரவேல் நகர் அருகில் இந்த கோவில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அலயம் மிகவும் பிரபலமானது. இங்கு ராமர், லட்சுமணன் மற்றும் சீதா தேவியின் சிலைகள் மிகவும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அனுமன், சிவன் மற்றும் பிற கடவுள்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் ஒரு தனியார் அறக்கட்டளையால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

கோதண்டராமர் கோவில், கர்நாடகா

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டம் ஹிரேமகளூரில் இந்த கோவில் அமைந்துள்ளது. ராமர், லட்சுமணர் இருவரும் வில் அம்புகளுடன் காட்சி தருகின்றனர். வழக்கத்திற்கு மாறாக, இந்த கோவிலில் சீதை ராமரின் வலது பக்கத்தில் எழுந்தருளியிருக்கிறார். ராமர் - சீதை திருமணத்தை காண வேண்டும் என புருஷோத்தமன் என்ற பக்தர் விருப்பம் தெரிவித்ததாகவும், அவரது விருப்பம் நிறைவேறியதாகவும் நம்பப்படுகிறது. பாரம்பரிய இந்து திருமணத்தில், மணமகள் மணமகனின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பார். இதை பிரதிபலிக்கும் வகையில் கருவறையில் ராமர்- சீதா தேவி சிலைகள் அமைந்துள்ளன.

ஸ்ரீ ராம தீர்த்த கோவில், அமிர்தசரஸ்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு 12 கிலோ மீட்டர் மேற்கில் சோகவான் சாலையில் அமைந்துள்ளது இக்கோவில். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதா தேவி தஞ்சம் புகுந்த இடம் இது. லவன் மற்றும் குசனை சீதாதேவி பெற்றெடுத்த இடம் என்பதால் சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. சீதா தேவி குளிப்பதற்காக படிக்கட்டுகளுடன் கூடிய கிணறும் இங்கு உள்ளது.

ரகுநாத் கோவில், ஜம்மு

இந்தக் கோவில் வளாகம் 7 கோவில்களை உள்ளடக்கியது. இது வட இந்தியாவின் மிகப்பெரிய கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில்கள் 1853-1860 காலகட்டத்தில் மகாராஜா குலாப் சிங் மற்றும் அவரது மகன் மகாராஜ் ரன்பீர் சிங் ஆகியோரால் கட்டப்பட்டன. இந்தக் கோவி வளாகத்தில் பல தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆனால் ராமர் கோவில் பிரதான கோவிலாக சிறப்பு பெற்றுள்ளது.

1 More update

Next Story