விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்


விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
x

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழா (சூரசம்காரம்), தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

தல புராணம்

ஒரு காலத்தில் இந்தப் பகுதி குரா எனும் ஒரு வகை மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவன் கண்ணில் பட்டது. அவன், அதனை வேட்டையாட வேண்டும் என்பதற்காக விரட்டி சென்றான். அப்போது, அந்த வேங்கை வேகமாக ஓடி ஒரு குரா மரத்துக்கு அருகில் வந்ததும் காணாமல் மறைந்தது. இதனைக் கண்ட வேடன் ஆச்சரியப்பட்டான்.

அப்போது, திடீரென்று அங்கு தோன்றிய மயிலும், விபூதி வாசனையும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை உணர்த்தியது. பிறகு, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அவ்விடத்தை ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு முருகனின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.

ஒரு முறை அருணகிரி நாதர் திருச்சியில் உள்ள வயலூர் தலத்துக்கு வந்தார். அங்குள்ள முருகப்பெருமானை திருப்புகழ் பாடிவிட்டு புறப்படும்போது, 'விராலிமலைக்கு வா' என்று முருகப்பெருமான் அசரீரியாக அழைத்தார். இதையடுத்து, விராலிமலையை நோக்கி பயணித்த அருணகிரிநாதருக்கு விராலிமலை முருகன் இருக்கும் இடம் புலப்படவில்லை. அப்போது வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. பின்பு அருணகிரிநாதர், விராலிமலை முருகப் பெருமானை வழிபட்டு அஷ்டமா சித்தி பெற்றார் என்கிறது தல புராணம்.

அருணகிரிநாதர், திருப்புகழில் இத்தலத்து முருகப் பெருமானை 18 முறை மனமுருகிப் பாடியுள்ளார். வசிஷ்டரும், அவரது மனைவி அருந்ததி தேவியாரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

கோவில் 207 படிகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோவிலில் இடும்பன், மீனாட்சி சுந்தரேசுவரர், சந்தானக்கோட்டம், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் முருகப்

பெருமான், சுமார் பத்தடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். இவர் ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன், வள்ளி - தெய்வானை சமேதராக கல்யாண திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் காற்றாடி மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மலை அடிவாரத்தின் தென்பகுதியில் சரவணப் பொய்கை உள்ளது.

விழாக்கள்

கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்), கார்த்திகை தீபம், நவராத்திரி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், தங்களுக்கு குழந்தை பிறந்ததும் இங்கு வந்து ஆறுமுகனிடம் குழந்தையை கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்திவிடுவர். பின்பு குழந்தையின் தாய்மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் மூலம் ஆறுமுகனிடம் தவிட்டைக் கொடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.

சுருட்டு நைவேத்தியம்

எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு. ஒரு சமயம் கருப்பமுத்து என்ற பக்தர், பெருங்காற்று, மழைக்கு இடையில் வீட்டுக்கு செல்ல முடியாமல் குளிரில் நடுங்கி நின்றார். அப்போது அவருக்கு அருகில் நின்ற ஒருவர் குளிருக்கு இதமாக இருக்கும் என சுருட்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்பு இருவரும் ஆற்றை கடந்து செல்லும்போது, அருகில் இருந்த நபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு முருகப்பெருமானுக்கு முன்பாக சுருட்டு இருப்பதை கண்டு, தம்மோடு வந்தது முருகப்பெருமான் என்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின்பு தான் கோவிலில் சுருட்டு படைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருச்சியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

1 More update

Next Story