உடையார்பாளையம் பயறணீஸ்வரர் ஆலயம்

பயறணீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத் தடை அகன்று, திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, உடையார்பாளையம். தமிழ்நாட்டில் உள்ள பாளையக்காரர்களின் ஆட்சிகளுள் உடையார்பாளையமும் ஒன்று. இங்கு சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திரு பயறணீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
தல புராணம்
அக்காலத்தில் மிளகுக்கு அதிக வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த சமயம் ஒரு வணிகர் இந்த ஊர் வழியாக மிளகு மூட்டையை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் சென்றார். மிளகுக்கு அதிக வரி என்பதால் மூட்டையில் இருப்பது பயறு என்று பொய் கூறி, குறைந்த வரி செலுத்திவிட்டு சென்றுவிட்டார். விருத்தாசலம் சென்று மூட்டையை பிரித்து பார்க்கும்போது மிளகெல்லாம் பயறாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தான் பொய் சொல்லி சென்றதற்கு இத்தல சிவபெருமான் கொடுத்த தண்டனைதான் இது என்பதை உணர்ந்தார். பின்பு இங்கு வந்து இறைவனை வழிபட்டு மன்னிப்பு கோரினார். இறையருளால் பயறெல்லாம் மீண்டும் மிளகாக மாறியது. இதனாலேயே இத்தல இறைவனுக்கு 'பயறணி நாதர்' என்ற திருப்பெயரும், ஊருக்கு 'பயறணீச்சுரம்' என்ற பெயரும் ஏற்பட்டன.
இங்கே உள்ள 'திரு பயறணீஸ்வரர் ஆலயம்' தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்று. சுவாமியின் திருநாமம் வடமொழியில் 'முற்கபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையின் பெயர் தமிழில் 'நறுமலர்ப் பூங்குழல்நாயகி' எனவும், வட மொழியில் 'சகுந்தளாம்பிகை' எனவும் அழைக்கப்படுகிறது.
வில்வளைத்த பிள்ளையார்
மிகவும் பிரமாண்டமாக காட்சி தரும் இக்கோவில் ஏழுநிலை கோபுரத்தை கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில் வற்றாத திருக்குளம் ஒன்று உள்ளது. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது முற்கபுரி என்றழைக்கப்படும் இந்த பயறணீஸ்வரத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவர்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டனர்.
அந்த சிரமத்தை போக்க பஞ்ச பாண்டவர்கள் விநாயகரை வேண்டி வழிபட்டனர். அதன்பொருட்டு அர்ச்சுனரின் காண்டீபத்தை வளைத்து அம்பு எய்து இந்த குளத்தை உருவாக்கினார் விநாயகர். அப்போதிருந்து இந்த குளத்தில் நீர் வற்றுவதே இல்லை என்கிறார்கள்.
அர்ச்சுனனின் காண்டீப வில்லை வளைத்து கொடுத்தவர் என்பதால் இங்குள்ள பிள்ளையார், 'வில்வளைத்த பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் தீர்த்தத்திற்கும் 'காண்டீப தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
இந்த ஆலயத்தில் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத் தடை அகன்று, உடனடியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் ராகு தோஷம் நீங்கி திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடக்கும். அதன்படி சித்திரையில் திருவோணம், மார்கழியில் திருவாதிரை, ஆனியில் உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும், மாசி, ஆவணி, புரட் டாசி ஆகிய மாதங்களில் வரும் சதுர்த்தசியிலும் என வருடத்தில் 6 நாட்கள் நடராஜருக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
கோவில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருச்சி ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில், ஜெயங்கொண்டத்தில் இருந்து மேற்கு திசையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது உடையார்பாளையம். அரியலூர், பெரம்பலூர், துறையூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற ஊர்களில் இருந்து உடையார்பாளையத்திற்கு நேரடி பேருந்து வசதி உண்டு.