செல்வச் செழிப்பை அள்ளித் தரும் சொர்ணகாளீஸ்வரர்


தினத்தந்தி 22 Aug 2025 1:33 PM IST (Updated: 22 Aug 2025 1:36 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் தை மாதம் தேர்த்திருவிழா, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளை கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200-வது ஆலயம் ஆகும். மேலும் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது 10-வது தலமாகும்.

தல வரலாறு

சிவபெருமானின் காளை வாகனம் சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற பெயர் வந்துள்ளது. சங்க காலத்தில் இந்த ஊரின் பெயர் ‘திருக்கானப்பேர்’ என வழங்கப்பட்டதை புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிய முடியும். கி.பி. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களில் சிவனை காளையாக உருவகித்து பாடியதால் இக்கோவிலின் தெய்வமான சிவன் ‘காளையார்’ என வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார்கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இவர் இங்குள்ள இறைவனிடம் வேண்டி தங்கத்தால் செய்த குழந்தையை இறைவனிடம் சமர்ப்பிக்கப் போகும்போது, அதை குளத்தில் போடுமாறு அசரீரி கேட்டது. உடனே அவர் கையில் இருந்த அந்த தங்கக் குழந்தையை குளத்தில் போட்டு விட்டு கையை மேலே எடுக்கும்போது, நிஜமான ஒரு ஆண் குழந்தை அவர் கையில் இருந்திருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டு திருவிழாவின்போதும் பொய்ப்பிள்ளையை மெய்ப் பிள்ளையாக்கும் நிகழ்வாக வைகாசி விசாகத்தன்று மிகவும் சிறப்பாக இந்த ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலின் தல விருட்சம் வெள்ளை நிற பூக்கள் கொண்ட மந்தாரை மரம். இரட்டையாக விரியக்கூடிய இலைகள் கொண்ட இந்த சிறு மரங்களில் கொக்கு நிற்பது போல பூக்கள் பூப்பதால் ‘கொக்கு மந்தாரை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கொக்கு மந்தாரை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.

யானைமடு தீர்த்தம், அக்காமடு தீர்த்தம், தங்கச்சிமடு தீர்த்தம் என்னும் மூன்று தெப்பங்களில் தீர்த்தம் எடுக்கப்பட்டு சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் இங்குள்ள சுமார் 150 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம் தகர்க்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர். அதன் பின்னரே அவர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டு தூக்கில் இடப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. கோவில்களை பாதுகாக்க மன்னர்கள் உயிரையும் தியாகம் செய்தனர் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

கோவில் அமைப்பு

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோவில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது. பொதுவாக ஒரு கோவிலில் ஒரு மூலவரும் அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனிச் சன்னதி கிடையாது. ஆனால், இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருள்கின்றனர்.

இங்கு சோமேஸ்வரர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று தாயார் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன. மேலும் வெளி மண்டபத்தில் மூன்று ஆண் தெய்வங்களும், மூன்று பெண் தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.

இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க, பல ஆயிரம் சிவாலயங்களை வழிபாடு செய்ய வேண்டியதிருந்தது. அதன் ஒருபகுதியாக இங்கும் வந்து வழிபட்டான். இத்தலத்தில் வழிபட்டதும் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு 1000 லிங்கங்களால் உருவான ‘சகஸ்ரலிங்கம்’ பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு ‘ஐராவதம்’ என்று பெயர். இந்த யானை சாபம் பெற்றதால் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. மனிதனின் பார்வையில் படக்கூடாது என்பது இந்த யானைக்கான விதி. ஆனாலும் ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால் அந்த யானை தன்னுடைய தலையால் பூமியை முட்டி பாதாளத்திற்குள் நுழைந்தது. யானை முட்டியதில் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் பெருகி ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு ‘யானை மடு’ என்று பெயர். வேறு எந்த கோவிலிலும் இல்லாத தங்கத்தால் ஆன பள்ளியறை இங்கு உள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன் இங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதியை ஏற்படுத்தினார். இங்குள்ள பெரிய கோபுரம் மருதுபாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோபுரத்திலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் விதத்தில் கட்டிட அமைப்பை உருவாக்கினார். அந்த காலத்தில் இதன் மீது ஏறினால் மதுரை மீனாட்சி அம்மன் கோபுரம் தெரியும் என்கின்றனர்.

பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது. சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் மன நோய் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருவிழாக்கள்

சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் தை மாதம் தேர்த்திருவிழா, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் சோமேஸ்வரர் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தெப்பத்திருவிழா நடைபெறும்.

ஆலயம் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து தென்கிழக்கே 66 கிலோமீட்டர் தூரத்திலும் காளையார்கோவில் உள்ளது.

1 More update

Next Story