சிறுவளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில்

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள ஒரு அழகிய கிராமம் சிறுவளஞ்சி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்துக்கு திருவேங்கடநாதபுரம் என்ற பெயரும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நம்பியாறு இவ்வூரின் வடக்குப்புறத்தில் இருந்து கிழக்கு நோக்கி பாய்ந்தோடுகிறது. தண்ணீரின் இடைவிடாத இரைச்சல் சத்தம் செவிகளுக்கு சங்கீதமாய் ஒலிக்கிறது.
பல்வேறு சிறப்புகளையுடைய இந்த கிராமத்தை, பண்டைக்காலத்தில் 'சிறுகளஞ்சியம்' என்று என்று அழைக்கப்பட்டதாக செவிவழிச்செய்தி உள்ளது. விளைபொருட்களை சேகரித்து வைக்கக்கூடிய ஒரு சிறிய களஞ்சியமாக இந்த ஊர் சிறப்பு பெற்றிருக்கிறது. சிறுகளஞ்சியம் என்ற பெயரே நாளடைவில் 'சிறுவளஞ்சி' என்று மருவி விட்டது என சொல்வோரும் உள்ளனர்.
'சிறுவளஞ்சி' என்ற பெயரை சொன்னவுடன், நம் நினைவுக்கு வருவது அங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் தான். இவர், அந்த கிராமத்தின் காவல் தெய்வம். சுமார் 100 ஆண்டுகளாக சுடலை ஆண்டவர் அங்கு குடிகொண்டு வருகிறார். பண்டைக்காலத்தில் பனைமரத் தொழிலாளர்கள் அந்த கிராமத்தில் அதிக அளவில் வசித்து வந்தனர். அதில் ஒருவர், கற்பக விருட்சமான பனைமரத்தில் இருந்து பக்குவமாக பதனீர் இறக்குவதில் சிறந்தவராக இருந்தார்.
ஊருக்கு மேற்கே ஒடுகிற நம்பியாற்றில் அழகான அணை ஒன்று உள்ளது. ஆற்றங்கரை யோரத்தின் வடக்குப்புறத்தில், அணைக்கரை என்ற அழகிய கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் நீண்டகாலமாக, பனைத்தொழில் செய்து வந்த மற்றொரு தொழிலாளி வசித்து வந்தார். அவரது வாழ்வாதாரமாக இருந்த பனை மரங்கள் ஏலத்துக்கு வந்தன. அதனை சிறுவளஞ்சியை சேர்ந்த பனைமரத் தொழிலாளி ஏலத்தில் எடுத்தார். இதனால் பனைமரத் தொழில் செய்யமுடியாமல் அணைக்கரையை சேர்ந்த தொழிலாளி ஆத்திரம் அடைந்தார். இரு தொழிலாளிகளுக்கு இடையே பகை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பனைமரத்தில் இருந்து பாளைகளை அணைக்கரையை சேர்ந்த தொழிலாளி வெட்டி எறிந்தார். இதனால் சிறுவளஞ்சியை சேர்ந்தவரின் தொழில் பாதிக்கப்பட்டது. கோபம் கொண்ட அவர் அணைக்கரையில் உள்ள பனைமரத் தொழிலாளியின் வைக்கோல் படப்புகளுக்கு தீ வைத்தார். தீயில் எரிந்து சாம்பல் ஆன வைக்கோல் படப்புகளை சிறுவளஞ்சி மற்றும் அணைக்கரையை சேர்ந்த பெரியவர்கள் பார்வையிட்டனர். அணைக்கரை தொழிலாளி மீது பகைமை கொண்ட சிறுவளஞ்சியை சேர்ந்த தொழிலாளியிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார். அதேநேரத்தில் அவர்தான் தனது வைக்கோல் படப்புக்கு தீ வைத்ததாக அணைக்கரையை சேர்ந்த தொழிலாளி கூறினார்.
இருவருக்கும் இடையே பகை இருந்த காரணத்தால் இந்த சம்பவத்தில் சிறுவளஞ்சி தொழிலாளியே ஈடுபட்டிருக்கலாம் என்று ஊர்ப் பெரியவர்கள் கருதினர். இதனால் தீ வைத்த தொழிலாளி, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி வரை, தான் வைக்கோல் படப்புகளுக்கு தீ வைக்கவில்லை என்றும், நஷ்டஈடு கொடுக்கமுடியாது என்றும் சிறுவளஞ்சி தொழிலாளி கூறி வந்தார்.
பஞ்சாயத்துக்கு கட்டுப்படாததால், இப்பிரச்சினையை சுடலை சுவாமியிடம் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது வைக்கோல் படப்புகளை தீயிட்டு கொளுத்தவில்லை என்றால், சுடலை மீது சத்தியம் செய்யுங்கள் என்று சிறுவளஞ்சி தொழிலாளியிடம் கூறப்பட்டது.
அதன்படி வடக்கு விஜயநாராயணத்துக்கு சென்றனர். அங்கு அருள்பாலித்து வரும் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலுக்கு சிறுவளஞ்சி தொழிலாளி அழைத்து செல்லப்பட்டார். ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் சூடம் ஏற்றி, நான் வைக்கோல் படப்பை தீ வைத்து கொளுத்தவில்லை என்று 3 முறை சத்தியம் செய்தார், சிறுவளஞ்சி தொழிலாளி.
சுடலை ஆண்டவர் பெயரில் சத்தியம் செய்து ஒரு ஆண்டு உருண்டோடியது. அதன்பிறகு தான் அந்த கிராமத்தில் சுடலை ஆண்டவர் தனது திருவிளையாடலை காட்ட ஆரம்பித்தார். அதாவது, சிறுவளஞ்சி கிராமத்தில் வசித்த சிலர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதனால் கிராம மக்களுக்கு மரண பயம் ஏற்பட்டு, மனம் கலங்கி பீதி அடைந்தனர். உடல் நலக் குறைவுக்கு தெய்வ குற்றம் காரணமாக இருக்கலாம் என்று பெரியவர்கள் கருதினர். இதனால் அச்சம் அடைந்த மக்கள், ஊரில் உள்ள அம்மன் கோவிலில் வழிபாடு செய்து அருள்வாக்கு கேட்டனர்.
அப்போது, சத்தியம் செய்ததால் சீறிப்பாய்ந்து கோபத்துடன் உங்களுடனே சுடலை வந்து விட்டான். அவனுக்கு பீடம் அமைத்து வழிபடுங்கள் என்று அம்மன் அருள்வாக்கு கூறினார்.
அதன்படி பீடம் அமைத்து வழிபட முடிவு செய்தனர். ஆனால் சிலர், சுடலைக்கு பீடம் எதற்கு என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி எதிர்த்தவர்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் சுடலை. இதனால் பாதிப்படைந்த மக்கள், மீண்டும் அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அந்த சமயத்தில், சுடலை சுவாமி ஒருவர் மீது இறங்கி அருள்வாக்கு கூறினார். அதாவது, "ஊரின் வடக்குபுறம் முச்சந்திப்பில் ஒத்தப்பனை உள்ளது. அங்கு ஒரு கத்தரி செடி இருக்கும். அந்த செடியில் ஒரு இலை, ஒரு பூ, ஒரு காய் இருக்கும். அந்த செடியின் அருகில் பீடம் அமைத்து வழிபாடு செய்யுங்கள்" என்று அருள்வாக்கு கூறினார். அதன்படி பீடம் அமைத்து தற்போது வழிபட்டு வருவது தான் சிறுவளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில்.
“என்னை பணிந்தவரை கைவிட மாட்டேன், காத்து நிற்பேன். என்னிடத்தில் வேண்டி வருபவர்களுக்கு அருள்பாலிப்பேன்" என்று அருள்வாக்கு கூறிய சுடலை ஆண்டவர் அதனை இன்றும் நிறைவேற்றி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு மாதமும் (தமிழ் மாதம்) கடைசி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களைகட்டும். தீபாராதனையுடன் கூடிய சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதேபோல் இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
கோவிலில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் வழிபட்டு செல்லலாம். தினமும் காலை 9 மணிக்கு பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுவாமிக்கு மூன்று வேளை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அமைவிடம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி-வள்ளியூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில், நம்பியாற்று பாலத்தில் இருந்து மேற்கு திசையில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுவளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில். வள்ளியூரில் இருந்து சிறுவளஞ்சி கிராமத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏர்வாடியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. அங்கிருந்து ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு வரலாம்.
தாய் பிரம்மசத்தியுடன் சுடலை ஆண்டவர்
சிறுவளஞ்சி கிராமத்தின் வடக்குப்புறம் நம்பியாற்றின் தென்புறத்தில் முச்சந்திப்பில் கிழக்கு முகம் பார்த்து ஒத்தப்பனையின் கீழ் சுடலை ஆண்டவர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். சுடலைக்கு வலதுபுறத்தில் தாய் பிரம்மசக்தியும், இடதுபுறத்தில் பேச்சியம்மனும், அருகில் சுடலை முண்டன் சுவாமியும் அருள்பாலிக்கின்றனர். இவர்களுக்கு எதிரே மேற்கு திசை நோக்கி கொம்பு மாடன் வீற்றிருக்கிறார்.
ஆவணி பெருங்கொடைவிழா
சிறுவளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருங்கொடை விழா நடத்தப்படுகிறது. ஆவணி மாதத்தில் 3-வது வெள்ளிக்கிழமையன்று இந்த பெருங்கொடைவிழா தொடங்கி 3 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை கால்நாட்டு வைபவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, செப்டம்பர் 4-ந் தேதி தொடங்கி நடைபெறு வருகிறது.