சேலம் சுகவனேஸ்வரர் கோவில்

முன்பு வனமாக இருந்த இத்தலத்தில் சுக முனிவர் கிளி வடிவத்தில் தவம் செய்து வழிபட்டதால், இத்தலத்து இறைவன் 'சுக வனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்றின் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் சுகவனேஸ்வரர், இறைவி பெயர் சொர்ணாம்பிகை. அருணகிரிநாதராலும், ஔவையாராலும் பாடல் பெற்ற சிறப்புமிக்க திருத்தலம் இதுவாகும்.
தல புராணம்
பிரம்ம தேவர் படைக்கும் தொழிலின் ரகசியத்தை பற்றி முனிவர்களிடம் விளக்கினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த சுகமுனி, அதை அப்படியே சரஸ்வதி தேவியிடம் சொன்னார். இதனால் கோபம் கொண்ட பிரம்ம தேவர், சுக முனிவரை கிளியாக மாறும்படி சாபமிட்டார். இதையடுத்து இத்தலத்திற்கு கிளியாக வந்து சிவபெருமானை வழிபட்டு வந்தார், சுக முனிவர். ஒருமுறை சிவபெருமானை வழிபடும்போது வேடன் ஒருவன் அங்கிருந்த கிளிகளை பிடிக்க முயன்றான்.
அப்போது அங்கிருந்த கிளிகளோடு சுகமுனிவரும் புற்றில் ஒளிந்துகொண்டார். இதனால் கோபம் கொண்ட வேடன், புற்றை இடித்தான். அப்போது சுகமுனிவர், புற்றில் இருந்த சிவலிங்கத்தை பாதுகாக்க தன் சிறகை விரித்தார். அதில் காயம் அடைந்த சுகமுனிவரின் சிறகில் இருந்து ரத்தம் பீறிட்டது. அந்த ரத்தம் புற்றில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதையடுத்து சிவபெருமான் சுகமுனிவருக்கு அருள்புரிந்து சாபவிமோசனம் அளித்தார்.
முன்பு வனமாக இருந்த இத்தலத்தில் சுக முனிவர் கிளி வடிவத்தில் தவமியற்றி வழிபட்டதால், இத்தலத்து இறைவன் 'சுக வனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் 13-ம் நூற்றாண்டில் மன்னன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. மேலும் சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. கோவிலின் வாசல் தெற்கு திசையை நோக்கி உள்ளது. ஆலயத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும் சொர்ணாம்பிகை அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த அன்னை மரகதவல்லி, பச்சைவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.
கோவில் மகாமண்டபத்தில் ஒரு பெரிய நந்தியும், அதன் பின்புறம் கொடிமரமும் உள்ளது. அதைக் கடந்து உள்ளே சென்றால், கருவறையில் சிவபெருமான் ஆவுடையாராக சுகவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கிறார். சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தும், வேடனால் வெட்டுப்பட்ட தழும்புடனும் உள்ளது. இறைவன் வன நாதர், கிளிவண்ணமுடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
தென்மேற்கில் இரட்டை விநாயகரும், வடமேற்கில் சுக வன சுப்பிரமணியரும் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் அறுபத்து மூவரும், வடகிழக்கில் பைரவர், சூரியன் சன்னிதிகளும் உள்ளன. பிரகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள், காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன. ஒரு மரப் பொந்தில் அண்ணாமலையாரின் உருவம் அற்புதமாக செதுக்கப்பட்டிருப்பது, சிற்பக்கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. கோவிலில் உள்ள குளம் 'அமண்டூக தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
திருவிழா-பிரார்த்தனை
இக்கோவிலில் வைகாசி திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். கார்த்திகை தீபம், சித்திரை திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள விகடசக்கர விநாயகருக்கு தேங்காய், பழம், கடலை, சர்க்கரை படைத்து வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் உள்ள நவக்கிரகங்களில் ராகு, செவ்வாய் ஆகிய இருவரும் இடம் மாறி காட்சி அளிக்கின்றனர். இந்த கிரகங்களை வழிபட்டால் பெண்களுக்கு நல்ல வரனும், ஆண்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும். இத்தலம் வந்து சுகவனேஸ்வரரையும், சொர்ணாம்பிகை அன்னையையும் வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
சேலம் பழைய பஸ் நிலையத்தின் அருகில் திருமணிமுத்தாற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.