மதுரை புட்டு சொக்கநாதர் கோவில்


மதுரை புட்டு சொக்கநாதர் கோவில்
x

புட்டு சொக்கநாதர் கோவிலில் ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் புட்டு திருவிழா நடைபெறும்.

மதுரை

மதுரை ஆரப்பாளையம் அருகே அமைந்துள்ளது, புட்டு சொக்கநாதர் கோவில். சிவபெருமானின் திருவிளையாடல்கள் நடைபெற்ற தலங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் புட்டு சொக்கநாதர், அம்பாள் மீனாட்சி அம்மன். கோவிலின் தல விருட்சமாக வன்னி மரமும், தல தீர்த்தமாக வைகையும் உள்ளன.

தல புராணம்

சிவபெருமான் மதுரை மாநகரில் 64 திருவிளையாடல்கள் நடத்தியதாக கருதப்படுகிறது. அதில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த படலம் வைகை ஆற்றங்கரையில் உள்ள இத்தலத்தில் தான் நடைபெற்றது.

ஒரு சமயம் வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மதுரை நகரமே அழியும் நிலை வந்தது. அப்போது மதுரையை ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டிய மன்னன், “வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகை கரையை வலுப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டான்.

இச்செய்தி மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. மதுரை நகரின் கிழக்கு திசையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்கு குழந்தைகள் இல்லை. முதுமையிலும் புட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். மூதாட்டி, தான் செய்யும் முதல் புட்டை சுந்த ரேஸ்வரருக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர்தான் அவிக்கும் புட்டை விற்க ஆரம்பிப்பாள்.

வைகை கரையை வலுப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, வந்திக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. குழந்தைகள் இல்லாததால், “இந்த பணிக்கு யாரை அனுப்புவது, வயதான காலத்தில் தன்னாலும் கரையை அடைக்க முடியாது" என்று மிகவும் வருத்தம் அடைந்தார்.

இறைவனின் திருவிளையாடல்

இதை அறிந்த சுந்தரேஸ்வரப் பெருமான் மூதாட்டிக்கு உதவ முடிவு செய்தார். அதன்படி, உருவத்தை மாற்றி வந்தியின் முன் வந்து நின்ற இறைவன், "பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்கு பதிலாக வேலை செய்கிறேன். கூலியாக நீ அவிக்கும் புட்டை மட்டும் கொடுத்தால் போதும்" என்று கூறினார். வந்தியும் அதற்கு ஒப்புக்கொண்டாள்.

இறைவன், தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்தார். அங்கு சிறிது நேரம் சுறுசுறுப்பாக மண் வெட்டினார். அதன் பிறகு, சரியாக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவறவிட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் வந்தியின் வீட்டுக்குச் சென்று, “பாட்டி புட்டு கொடு. கூலியில் கழித்துக்கொள்” என வாங்கி சாப்பிடுவார்.

பின்பு அங்கிருந்த நீரில் குதித்து விளையாடினார். இவர் செய்வதை பார்த்து உடன் வேலை செய்தவர்களும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இதனால் வந்தி மூதாட்டியின் இடத்தில் மட்டும் ஒழுங்காக வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை காவலர் அங்கு வந்தார். அவர், "வேலை செய்யாமல் என்ன ஆடிக்கொண்டிருக்கிறாய். மூதாட்டியிடம் புட்டை வாங்கித் தின்றுவிட்டு வேலை செய்யாமல் ஏமாற்றுகிறாயா" என்று கண்டித்தார்.

அச்சமயம் பணிகளைப் பார்வையிட அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்தார். அப்போது ஒரு இடத்தில் மட்டும் வேலை நடைபெறாமல் இருப்பதை பார்த்து கோபம் அடைந்தார். மன்னன் விசாரிக்க, கூலியாளராக வந்த இறைவன்தான் அந்த இடத்திற்கு பொறுப்பு என்பதை அறிந்தார். இதையடுத்து, காவலரிடம் இருந்த பிரம்பைப் பிடுங்கி, அவரின் முதுகில் ஒங்கி அடித்தார். ஆனால் அடிப்பட்ட இறைவனுக்கு பதிலாக மன்னன் அலறினான். மன்னன் மட்டுமல்ல, அங்கு நின்றவர்கள் எல்லோரும் அலறினர்.

பின்பு இறைவன், ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். உடனே, கரைபுரண்டு ஓடிய வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த பிரம்பு அடி, தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். அந்த வேளையில் கூலியாளாய் வந்த இறைவன் மறைந்துவிட்டார். அப்போது தான் கூலியாளாய் வந்தது சிவன் என்பதை மன்னனும், மக்களும் உணர்ந்தனர். பின்பு வானில் தோன்றிய இறைவன் வந்தி மூதாட்டிக்கு அருள்புரிந்து, அவளை வானுலகம் அழைத்துச் சென்றார்.

கோவில் அமைப்பு

ஆலயத்தின் கருவறையில் மூலவர் புட்டு சொக்கநாதர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள புட்டு சொக்கநாதரின் வலதுபக்கம் மீனாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. எனவே இது திருமணக்கோல சன்னிதி ஆகும். சிவபெருமான் வந்தியம்மைக்கு இந்த இடத்தில் தான் மோட்சம் கொடுத்தார். அதன் அடிப்படையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. எனவே, இங்கு மட்டுமே வந்தியம்மைக்கு தனிச் சன்னிதி உள்ளது.

பிரகாரத்தைச் சுற்றிலும் விநாயகர், பாலமுருகன், திருமணக் கோலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சரஸ்வதி, மகாலட்சுமி, சுந்தரானந்தர், துர்க்கை, வீரபத்திரர், சப்தகன்னிமார், கல்யாண விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கலியநாயனார், ஐயப்பன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் போன்ற தெய்வங்கள் உள்ளன.

திருவிழா

இக்கோவிலில் ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் புட்டு திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மட்டும் இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள உற்சவ வந்தியம்மை இங்கு வந்து அலங்காரம் செய்து, முக்தி பெற்று பூப்பல்லக்குடன் மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வார். இத்திருவிழாவிற்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியரும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும் வருகை தருவர். பக்தர்கள் சர்ப்ப கால தோஷ நிவர்த்திக்காக இங்குள்ள ஹர ஹரி சர்ப்ப ராஜாவிற்கு பால் அபிஷேகம் செய்து வணங்கிச் செல்கின்றனர்.

இரண்டு வாகனங்களுடன் பைரவர்

பொதுவாக, அனைத்து ஆலயங்களிலும் பைரவர் ஒரு நாய் வாகனத்துடனோ அல்லது நாய் வாகனம் இல்லாமலோ அருள்பாலிப்பார். சில தலங்களில் இரண்டு, மூன்று மற்றும் எட்டு பைரவர்கூட இருப்பதுண்டு. ஆனால் இங்குள்ள பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால் இவர் 'இரட்டை வாகன கால பைரவர்' என அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம், நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story