திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர் கோவில்
கருவறையில் மூலவர் ஆனந்தீஸ்வரர், பிரதோஷ நந்திக்கு எதிராக பச்சை நிற லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.
சிவபெருமான் மரகத பச்சை லிங்கத் திருமேனியுடன் கோவில் கொண்டுள்ள தலமாகவும், நவக்கிரகங்கள் இல்லாத தலமாகவும், குரு தோஷ பரிகார நிவர்த்தி தலமாகவும், வழிபடுபவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித்தரும் ஆலயமாகவும், அகத்தியர் வழிபட்ட தலங்களில் முக்கியமானதாகவும் இருக்கிறது திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர் திருக்கோவில்.
தல புராணம்
கயிலாயத்தில் சிவ -பார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர்கள் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. பூமியை சமநிலைப்படுத்தும் நோக்கில் சிவன், அகத்திய முனிவரை தென்னகத்திற்குப் புறப்பட்டுச் செல்ல உத்தரவிட்டார். அதன்படி அகத்திய முனிவர் தென்னகத்துக்கு வந்தார். அப்படி வரும் வழியில், அவர் பல இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு வழிபடப்பட்ட லிங்கங்களில் ஒன்றே திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர். இவருக்கு சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரன் கி.பி. 1022-ல் திருப்பணி செய்ததாகக் கல்வெட்டு சான்று கூறுகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் ஈக்கோடு கோட்டத்தில் புலியூர் நாட்டு சதுர்வேதி மங்கலம் என இப்பகுதியை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கோவில் அமைப்பு
கோவில் கொடிமரம், பலிபீடத்தை வணங்கி உள்ளே சென்றால் மண்டப முகப்பில் கணபதி, முருகன் நின்ற கோலத்தில் உள்ளனர். சிவன் - பார்வதி ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுதை சிற்பங்களாக காட்சி தருகின்றனர். இதையடுத்து மகா மண்டபத்திற்குள் நுழைந்தால், இடது புறமாக பரமேஸ்வரன் அபயஹஸ்த முத்திரையுடன் சூலம், உடுக்கை தாங்கியபடி ஜடா முடியுடன் அருள் வழங்குகிறார். மண்டபத்தை சுற்றி பல அழகான சுதை சிற்பங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
மகா மண்டபத்தில் கலைநயமிக்க 10 தூண்கள் உள்ளன. கருவறைக்குச் செல்லும் முன்பாக இடதுபுறம் ஆனந்த கணபதி, ஆனந்த முருகன் அருள்பாலிக்கின்றனர். ஆனந்தீஸ்வரர் என்ற எழுத்துகளுக்கு மேலே அகத்தியர், நந்தியம் பெருமானுக்கு எதிரில் லிங்க வடிவ சிவபெருமானை பூஜிப்பது போன்ற மஞ்சள் நிற சிற்பம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருவறையில் மூலவர் ஆனந்தீஸ்வரர், பிரதோஷ நந்திக்கு எதிராக பச்சை நிற லிங்கத் திருமேனியுடன் அற்புதமாக காட்சி தருகிறார். இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் பீடம் தாமரை இதழ் வடிவில் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பு. இத்தலத்து இறைவனை வழிபடுவோருக்கு குபேர யோகம் கிடைக்கும். அகத்திய மகரிஷி பூஜித்த மூர்த்தி என்பதால், பாவம் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. அதற்கடுத்து ஆனந்த வள்ளியம்மன், நால்வர் சன்னிதி, சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகியோர் தனித்தனியே காட்சி தருகின்றனர். மூலவரே இக்கோவிலில் பிரதானம் என்பதால் இக்கோவிலில் நவக்கிரகங்களும், பரிவார மூர்த்திகளும் இல்லை.
ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மாலை 6 மணி அளவில் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது. இக் கோவிலின் தல விருட்சமாக கல்லால மரம் இருக்கிறது. இதனால் இக்கோவில் குரு பரிகார தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. குரு தட்சிணாமூர்த்தி, இந்த மரத்தின் கீழ் அமர்ந்து தான் சனகாதி மகரிஷிகளுக்கு உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது.
ருத்ராட்ச மரங்கள்
மூலவருக்கு மேல் உள்ள விமானத்தில் தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து இருப்பது போன்ற சிற்பமும், அகத்திய முனிவர் சிற்பமும் அழகுற காட்சி தருகின்றன. மேலும் இக்கோவிலை சுற்றி பல அரிய மூலிகைகள் உள்ளன. குறிப்பாக ருத்ராட்ச மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிலும் இரண்டு முக ருத்ராட்ச மரம் இக்கோவிலில் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இறைவன் பாம்புக்கு நச்சுத்தன்மையை வரமாக அளித்த இடம் இதுவாகும். இதனால் இக்கோவில் இறைவன் 'ஆனந்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார்.
இங்குள்ள மூலவருக்கு பௌர்ணமி அன்றும், மற்ற விசேஷ நாட்களிலும் மாலை நேரத்தில்தான் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஏனெனில் அகத்திய முனிவர் மாலை வேளையில்தான் சிவபெருமானை வழிபாடு செய்தார். ஆகவே இங்குள்ள சிவபெருமான் 'அந்தீஸ்வரர்' எனவும் அழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை
திருமணம், புத்திரப் பாக்கியம், வேலை கிடைக்க, வீடு அமைய, மன அமைதி ஏற்பட, குழந்தைகள் கல்வியில் சிறக்க பக்தர்கள் இங்கு உள்ள குரு பகவானை வணங்கி, பிரார்த்தனை செய்து வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
அனைத்து விதமான துன்பங்களும் அகல ஆனந்தீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கல்லால மரத்தின் கீழே அமர்ந்துள்ள குரு தட்சிணாமூர்த்தியை தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை காசாகவோ, கற் கண்டு போன்ற பொருட்களையோ நேர்த்திக்கடனாக செலுத்து கின்றனர்.
திருவிழாக்கள்
கோவிலில் ஆண்டுத்தோறும் திருக்கல்யாணம், கார்த்திகை மாதம் 108 சங்கு அபி ஷேகம், மகா சிவராத்திரி, அகத்தியர் குரு நாள், பிரதோஷம், வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் போன்றவை வெகுவிமரிசையாக நடைப்பெறுகிறது.
கோவில், காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர் கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் அருகே பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமையப் பெற்றுள்ளது.